

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
நாக்பூர்: பாஜக எந்தவொரு சமூகத்துக்கும் எதிரானதல்ல என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.
சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஜனசங்க நிறுவனர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி குறித்த சொற்பொழிவு தொடர் நிகழ்வில் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
“இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாடுகள் உருவாக்கப்பட்டன. அதன் வரலாறு குறித்து நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதன் விளைவுகளை இன்றும் நாம் அனுபவித்து வருகிறோம்.
தேசம் முதன்மையானது என்பது நமது (பாஜக) அடையாளம். தேசியவாதம் நமது கூட்டு நம்பிக்கை. தேசத்தின் மீது மிகுந்த பற்றும், பக்தியும் கொண்டவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி. ஆனால், காங்கிரஸ் கட்சியின் கொள்கை என்பது திருப்திப்படுத்தும் அரசியல்.
வாக்கு அரசியலுக்காக மதச்சார்பின்மையை அந்த கட்சி கையில் எடுத்தது. அது மதங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தியதுடன், சாதியவாதம் மற்றும் வகுப்புவாதத்துக்கும் வழிவகுத்தது.
ஆனால், நாம் என்ன சொல்கிறோம் என்றால் இந்தியர்களான நாம் அனைவரும் ஒன்று என்கிறோம். நமது நாட்டில் ஒருவர் மசூதிக்கு செல்லலாம், கோயில், தேவாலயம் என எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அப்படி இருப்பினும் நாம் அனைவரும் ஒன்று. இந்தியர்களாகிய நமது கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம் என அனைத்தும் ஒன்றே. நமது வழிபாடு மட்டுமே மாறுபடுகிறது. அதற்கான அனுமதியை அரசியலமைப்பு நமக்கு வழங்குகிறது.
பாஜக எந்தவொரு சமூகத்துக்கும் எதிரானதல்ல. அனைத்து சமூகங்கள், மதங்கள் மற்றும் சாதியினரையும் ஒன்றிணைத்துச் செயல்பட பாஜக விரும்புகிறது. அனைவருக்கும் அனைத்திலும் சம உரிமை உள்ளது.
அனைத்து மதத்தினரையும் தேசிய சிந்தனையுடன் ஒன்றிணைப்பதன் மூலம் உலகுக்கு வழிகாட்டும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். இது இந்துக்களுக்கான இந்தியா மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது” என்றார்.