

புதுடெல்லி: இந்தியாவில் 1 லட்சம் பள்ளிகளில் மின்சார வசதியும் 98,500 பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறை வசதியும் இல்லை என்று நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்தியாவில் பள்ளிக் கல்வி முறை' என்ற தலைப்பில் நிதி ஆயோக் அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தண்ணீர் வசதி, கழிப்பறைகள், மின்சாரம், ஆய்வகங்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்றி இயங்கி வருகின்றன. சில பள்ளிகளில் மாணவர்களே இல்லை. மேலும், ஆரம்பக் கல்விக்குப் பிறகு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பாதியில் விலகும் விகிதம் பல மாநிலங்களில் ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக, அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 10-15 சதவீதத்தினர் மட்டுமே அவர்கள் கற்பிக்கும் பாடத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற முடிகிறது.
குறிப்பாக, நாடு முழுவதும் 98,592 பள்ளிகளில் உள்ள பெண்களுக்கான கழிப்பறைகள் செயல்பாட்டு நிலையில் இல்லை. 61,540 பள்ளிகளில் கழிப்பறைகளே இல்லை. அதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிகளுக்கான மின்சார வசதி 55-ல் இருந்து 91.9% ஆக உயர்ந்துள்ளது. எனினும், 1.19 லட்சம் பள்ளிகள் இன்னும் மின்சார வசதி இன்றி உள்ளன.
மேலும், 14,505 பள்ளிகளில் தண்ணீர் வசதி இல்லை. இதற்கிடையில், 59,829 பள்ளிகளில் கை கழுவும் வசதிகள் இல்லை. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 51.7% மட்டுமே அறிவியல் ஆய்வகங்களைக் கொண்டுள்ளன.
நாட்டில் 1,04,125 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் 89% கிராமப்புறங்களில் அமைந்துள்ளன.
இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.6 சதவீதத்தை மட்டுமே கல்விக்காகச் செலவிடுகிறது. இது இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சுமார் 5.9% ஆகவும், ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் சுமார் 5.4% ஆகவும் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.