

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.
நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்து 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு, தற்சார்பு மற்றும் கட்டமைப்பு மாற்றங்களை அடைவதற்கான வழிகள் குறித்து நிபுணர்களிடம் இருந்து பிரதமர் மோடி ஆலோசனைகளைப் பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும், ஏற்றுமதியை அதிகரிப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது, முதலீடுகளை ஈர்ப்பது, திறன் மேம்பாடு நாட்டின் பணியாளர் தொகுப்பில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பது போன்ற பரந்த அளவிலான தலைப்புகள் குறித்தும், விவசாய உற்பத்தியில் கவனம் செலுத்துவது குறித்தும் விவா திக்கப்பட்டதாக தெரிகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அடுத்த நாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
4-வது பொருளாதார நாடு: நடப்பு 2025-ம் ஆண்டு நிறைவை ஒட்டி மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலகில் பொருளாதார ரீதியாக அதிவேகமாக வளரும் நாடாக இந்தியா விளங்குகிறது. வரும் 2047-ம் ஆண்டில் உயர் நடுத்தர வர்க்க குடும்பத்தினர் அதிகம் வசிக்கும் நாடாக இந்தியா உருவெடுக்கும். தற்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.18 டிரில்லியன் டாலரை தாண்டி உள்ளது. இதன்மூலம் ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் 4-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. அடுத்த 3 ஆண்டுகளில் நாட்டின் ஜிடிபி 7.3 டிரில்லியன் டாலரை தாண்டும். அப்போது ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.
ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு இருப்பதால் உள்நாட்டு வணிகம் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. கடந்த ஏப்ரலில் வேலை வாய்ப்பின்மை 5.1 சதவீதமாக இருந்தது. கடந்த நவம்பர் நிலவரப்படி இந்த சதவீதம் 4.7 ஆகக் குறைந்திருக்கிறது.
கடந்த ஜனவரி நிலவரப்படி இந்தியாவின் ஏற்றுமதி 36.43 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த நவம்பரில் இந்திய ஏற்றுமதி 38.13 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. பிரிட்டன், ஓமன், நியூசிலாந்து உடனான பொருளாதார உறவு வலுப்படுத்தப்பட்டு உள்ளது. சீனா, ஹாங்காங், பிரேசில், இத்தாலி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி கணிசமாக அதிகரித்திருக்கிறது.
நடப்பு 2025-26-ம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் பல்வேறு பன்னாட்டு நிதி அமைப்புகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளன. வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாவது உறுதி.
இவ்வாறு மத்திய அரசின் புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் கூறியதாவது: உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. 3-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜிடிபி 5.1 டிரில்லியன் டாலராக உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தை இந்தியா எட்டிப் பிடிக்கும்.
தற்போது 2-வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஜிடிபி 19.2 டிரில்லியன் டாலராக உள்ளது. முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜிடிபி 30.5 டிரில்லியன் டாலராக இருக்கிறது.
வரும் 2047-ம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 30 டிரில்லியன் டாலரை தாண்டும். அப்போதும் இந்தியா 3-வது இடத்திலேயே நீடிக்கும். வரும் 2075-ம் ஆண்டில் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். அப்போது சீனா முதலிடத்திலும் அமெரிக்கா 3-வது இடத்திலும் இருக்கும். இவ்வாறு சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.