

புதுடெல்லி: நிதி நிர்வாகத்தில் மாநிலங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.
டைம்ஸ் நெட்வொர்க் இந்தியா பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறியதாவது: நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மைக்காக மத்திய அரசு தெளிவான இலக்குகளை நிர்ணயித்து அதனை சரியாக கடைபிடித்துள்ளது. இதனால் கடன் அளவு குறைந்துள்ளது. இதேபோல் மாநிலங்களும் தங்களது நிதி மேலாண்மையில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்.
அடுத்த நிதியாண்டில் கடன் அளவைக் குறைப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்படும். வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறும் நமது இலக்கை அடைவதற்கு மாநிலங்கள் தங்களது கடன் அளவுகளை குறைக்க வேண்டும்.
பட்ஜெட் தயாரிப்பில் வெளிப்படைத்தன்மைக்கு தெளிவான இலக்குகளை மத்திய அரசு வரையறுத்துள்ளது. இதன் மூலம் நிதி மேலாண்மை அனைவருக்கும் தெரியும் வகையிலும், மிக உயர்ந்த பொறுப்புடமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.