

புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்படுவது தொடர்பாக 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களுக்கு ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கடத்தப்படுகின்றன. இந்தக் கடத்தலை தடுக்க எல்லை பாதுகாப்பு படை மற்றும் அந்தந்த மாநிலபோலீஸார் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செயற்கைக்கோள் கட்டுப்பாட்டில் இயக்கப்படும் ட்ரோன்கள் மூலம் ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஸ்ரீ கங்காநகரில் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் வீசப்பட்டன. இந்த ஆயுதங்கள், போதை பொருட்கள் காரில் பஞ்சாபுக்கு கடத்திச் சென்றபோது அந்த மாநில போலீஸார் விரட்டிப் பிடித்தனர். இதுதொடர்பாக குல்விந்தர் சிங்,ராபின் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ட்ரோன்கள் மூலம் கடத்தி வரும் ஆயுதங்கள் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார், ராஜஸ்தானுக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் 5 இடங்கள், மகாராஷ்டிராவில் 3 இடங்கள், பிஹாரில் 2 இடங்கள், ராஜஸ்தானில் 2 இடங்கள் என மொத்தம் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படும் ஆயுதங்கள், வெடிபொருட்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. அவர்கள் மூலம் பஞ்சாப், டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.
துபாயில் இருந்து செயல்படும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவாளி ஷாகத் சமூக வலைதளங்கள் மூலம் இந்திய இளைஞர்களை ஈர்த்து ஆயுதகடத்தலில் ஈடுபட வைக்கிறார். ஐஎஸ்ஐஅமைப்பின் இந்திய ஏஜெண்டாக ஜஸ்வீர் சவுத்ரி என்பவர் செயல்பட்டு உள்ளார். அவரையும் அவரது கூட்டாளிகள் சிலரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
செயற்கைக்கோள் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்பட்டது தொடர்பாக பஞ்சாபை சேர்ந்த குல்விந்தர் சிங், ராபின் சிங் கைது செய்யப்பட்டு உள்ளனர். பொதுவாக குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்படுவது வழக்கம். அண்மைக் காலமாக செயற்கைக் கோள் உதவியுடன் கண்ணுக்கு எட்டாத உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வகை ட்ரோன்களை கண்டறிவது கடினம். எனவே செயற்கைக்கோள் உதவியுடன் பறக்கும் ட்ரோன்களை கண்டறிவது தொடர்பாக இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓவின் உதவியைக் கோரி உள்ளோம். இவ்வாறு என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.