

புதுடெல்லி: யமுனை ஆற்றில் கலப்பதற்கு முன் நஜாஃப்கர் வடிகாலின் நீரை சுத்திகரிக்க புதிய இயந்திரத்தை டெல்லி பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா நேற்று தொடங்கி வைத்தார்.
தென்மேற்கு டெல்லி, துல்சிராஸ் கிராமத்தில் இந்த இயந்திரத்தை அமைச்சர் தொடங்கி வைத்த பிறகு கூறியதாவது: யமுனையில் ஏற்படும் மாசுபாட்டில் சுமார் 70 சதவீதம் நஜாஃப்கர் வடிகாலால் ஏற்படுகிறது. சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் இதன் வழியாக யமுனையில் கலக்கிறது.
உலகின் சிறந்த இயந்திரங்களில் ஒன்றை நாங்கள் நிறுவியுள்ளோம். பின்லாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரம் ஒரு மணி நேரத்தில் சுமார் 600 கன மீட்டர் வண்டல் மண்ணை அகற்றும் திறன் கொண்டது. சுத்திகரிக்கப்படாத சேறு, வண்டல் மண் மற்றும் திடக்கழிவுகள் யமுனை ஆற்றில் கலப்பதைத் தடுப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.