தவெகவில் 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சார குழு நியமனம்

தவெகவில் 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சார குழு நியமனம்
Updated on
1 min read

தவெகவில் 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சார குழுவை விஜய் நியமித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடுபேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக தேர்தல் களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது.

கடந்த 9-ம் தேதி தவெக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக 12 பேர் கொண்ட குழுவை நியமித்திருந்தார் விஜய். தவெக தேர்தல் அறிக்கை குழுவானது தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள், சிறு குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், விவசாய சங்கங்கள், மகளிர் அமைப்புகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டு, அதனை வைத்து தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள, தேர்தல் பிரச்சாரக் குழுவை விஜய் அமைத்துள்ளார். தவெக பிரச்சாரக் குழுவில் கட்சியின் பொதுச் செயலாளர் என் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, உயர்மட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது. தேர்தல் பிரச்சார குழுவில் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன், ஏ.பார்த்திபன், பி. ராஜ்குமார், கே.வி. விஜய் தாமு, எஸ்.பி. செல்வம், கே. பிச்சைரத்தினம் கரிகாலன், எம். செரவு மைதின் (எ) நியாஸ், ஜே. கேத்ரின் பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கண்ட குழு, 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தவெகவில் 10 பேர் கொண்ட தேர்தல் பிரச்சார குழு நியமனம்
“தமிழக மக்களின் நலனுக்காகவே ஆட்சியில் காங். பங்கு கோருகிறது” - சச்சின் பைலட் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in