

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் நேருக்கு நேர் பேசியது கிடையாது என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய “பிளாங்கிங்: ஏ ஜர்னி ஆப் லவ்” என்ற சுயசரிதை புத்தகம் நேற்று வெளியானது. ஏழு அத்தியாயங்கள், 544 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தில் தனது வாழ்நாளின் முக்கிய தருணங்களை அவர் நினைவுகூர்ந்து உள்ளார்.
சுயசரிதை நூலில் அவர் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்ற கூட்டத் தொடர்களின்போது சபாநாயகரின் அறையில் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடுவது வழக்கம். சபாநாயகரின் அறைசிறியது. அப்போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பேன். இருவரும் பரஸ்பரம் வணக்கம் மட்டுமே கூறுவோம்
.கடந்த காலத்தில் சபாநாயகரின் அறையில் மூத்த தலைவர்கள் சந்திக்கும்போது நட்பு பாராட்டுவார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி வேறு பக்கமாக திரும்பி விடுவார். கண் பார்த்து, முகம் பார்த்து பேச மாட்டார். அவருடன் நேருக்கு நேர் பேசியது கிடையாது. சில நேரங்களில் என்னுடைய உடல்நலம் குறித்து விசாரித்து உள்ளார். அப்போதுகூட சில வார்த்தைகளில் மட்டுமே உரையாடி உள்ளோம். எங்கள் இருவரின் கொள்கைகளும் வெவ்வேறானவை. நான் மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழியில் நடக்கிறேன்.
பல்வேறு இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் கொள்கையை பின்பற்றுகிறேன். பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பால் வளர்க்கப்பட்டவர். அவர் அந்த அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றுகிறார். அரசியல் கொள்கை ரீதியாக இருவரும் வேறுபட்டிருக்கிறோம். ஆனால் தனிப்பட்ட பகை கிடையாது. கடந்த 2002-ம் ஆண்டில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தது, அதன் பிறகு குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் ஆகியவை மிகவும் துயரமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்திரா காந்திக்கும், மேனகா காந்திக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பிரணாப் முகர்ஜியின் பிரதமர் கனவு, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் பெண்கள் மீதான ஈர்ப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து சோனியா காந்தி குறிப்பிட்டு உள்ளார்.
பிரதமர் பதவியை மறுத்தேன்
கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே பிரதமர் பதவியை ஏற்கக்கூடாது என்று முடிவு எடுத்துவிட்டேன். இந்திரா, ராஜீவ் படுகொலைகளால் எனது மகன் ராகுல், மகள் பிரியங்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். நான் பிரதமரானால் எனக்கும் அதே நிலை ஏற்படக்கூடும் என்று கவலைப்பட்டனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் நான் பிரதமராக பதவியேற்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் நான் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன் என்று சோனியா காந்தி தனது சுயசரிதை நூலில் தெரிவித்துள்ளார்.
மரணத்துக்கு தயாரான இந்திரா
புளூஸ்டார் ஆபரேஷன் தொடர்பான புகைப்படங்களை அன்றைய பிரதமர் இந்திராவிடம் அதிகாரிகள் காட்டியபோது அவர் கண்ணீர் வடித்தார். இதன்பிறகு அவருக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதுகுறித்து பேரன் ராகுலிடம் இந்திரா காந்தி அப்போதே மனம் திறந்து பேசினார். “நான் மரணத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நீ தைரியமாக இருக்க வேண்டும். எந்த சூழலிலும் அழக்கூடாது” என்று அவர் தெரிவித்தார். புளூ ஸ்டார் ஆபரேஷனுக்கு பிறகு 5 மாதங்கள் கழித்து சொந்த பாதுகாவலர்களாலேயே இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.
முதல் குழந்தை உயிரிழப்பு
கடந்த 1969-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி எனக்கு முதல் குழந்தை பிறந்தது. முன்கூட்டியே குழந்தை பிறந்ததால் இன்குபேட்டரில் வைத்து பராமரித்தனர். ஆனால் அடுத்த நாளே குழந்தை உயிரிழந்துவிட்டது. மத சம்பிரதாயங்களின்படி குழந்தையின் உடலை ஆற்றில் வீச வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நதியில் வீசப்படும் எனது குழந்தையின் உடல் கரை ஒதுங்கி நாய்கள் இழுத்துச் செல்லும் நிலை ஏற்படக்கூடாது என்றேன். பின்னர் மெக்ராலியில் உள்ள பெரோஸ் காந்தியின் பண்ணை வீட்டில் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.