பாட்னா: பிஹாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக கோசி, திரிசூலி நதிகளில் வரலாறு காணாத வகையில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கங்கையின் கிளை ஆறுகளான கோசி, கண்டக் ஆறுகள் நேபாளத்திலும், பிஹாரிலும் ஓடுகின்றன. இந்த ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிஹாரிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிஹாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் சாம்ராட் சவுதரி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். இது தொடர்பாக சாம்ராட் சவுத்ரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை கருத்தில் கொண்டு பகஹா, வால்மீகி நகர், பெட்டியா, மோதிஹாரி உள்ளிட்ட பிஹாரின் எல்லைப் பகுதிகளில் வெள்ள நிலைமையை நான் வான்வழி ஆய்வு செய்தேன்.
தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மிக விரைவாக எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதும் மாநில அரசின் உயர் முன்னுரிமையாக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், கண்டக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் 36 மதகுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறவதாக பிஹார் மாநில நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. அத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வால்மீகி நகரில் உள்ள கண்டக் தடுப்பணையில் இருந்து புதன்கிழமை இரவு 11 மணி அளவில் 1.50 லட்சம் கன அடியாக இருந்த நீர் வெளியேற்றம், வியாழக்கிழமை காலை 1.04 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது. நேற்று அதிகரித்த நீர்மட்டம் இன்று குறையத் தொடங்கியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கங்கை ஆற்றை ஒட்டியுள்ள பாட்னாவின் நக்தா தியாரா பகுதியில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். தங்களின் கால்நடைகள், இரு சககரவாகனங்கள் உள்ளிட்டவற்றுடன் அவர்கள் படகு மூலம் கங்கை ஆற்றைக் கடந்து பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.