

ராஜ்நாத் சிங் |கோப்புப் படம்
வதோதரா: “நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பொது நிதியைப் பயன்படுத்தி பாபர் மசூதி கட்ட விரும்பினார். ஆனால், சர்தார் வல்லபாய் படேல் அதனை அனுமதிக்கவில்லை” என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
சர்தார் படேலின் 150-வது பிறந்தநாளை நினைவுகூரும் விழாவின் ஒரு பகுதியாக வதோதரா அருகே உள்ள சாத்லி கிராமத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “படேல் ஒருபோதும் திருப்திப்படுத்தும் அரசியலில் நம்பிக்கை இல்லாத, ஓர் உண்மையான தாராளவாத மற்றும் மதச்சார்பற்ற நபர். பண்டிட் ஜவஹர்லால் நேரு பொது நிதியைப் பயன்படுத்தி அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்ட விரும்பினார். இந்த திட்டத்தை எதிர்த்தவர் யார் என்றால், அது குஜராத்தி தாய்க்கு பிறந்த சர்தார் வல்லபாய் படேல் தான். பொது நிதியைப் பயன்படுத்தி பாபர் மசூதியைக் கட்ட அவர் அனுமதிக்கவில்லை.
குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலை மீட்டெடுப்பது குறித்து நேரு கேள்வி எழுப்பியபோது, அந்தக் கோயில் வேறு விஷயம் என்று படேல் தெளிவுபடுத்தினார். ஏனெனில் அக்கோயிலின் மறுசீரமைப்புக்குத் தேவையான ரூ.30 லட்சம் பொது மக்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இதற்காக ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டது.
மேலும் அரசாங்கத்தின் பணத்தில் ஒரு பைசா கூட சோம்நாத் கோயில் பணிக்காக செலவிடப்படவில்லை. அதேபோல், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அரசாங்கம் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. முழு செலவையும் நாட்டு மக்களே ஏற்றுக்கொண்டனர். இதுவே உண்மையான மதச்சார்பின்மை என்று அழைக்கப்படுகிறது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ சர்தார் படேல் பிரதமராக ஆகியிருக்கலாம், ஆனால் அவர் தனது வாழ்க்கையில் எந்தப் பதவிக்கும் ஒருபோதும் ஆசைப்படவில்லை. நேருவுடன் சித்தாந்த வேறுபாடுகள் இருந்தபோதிலும், மகாத்மா காந்திக்கு வாக்குறுதி அளித்ததால் அவருடன் பணியாற்றினார்.
1946-ஆம் ஆண்டு, படேல் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவிருந்தார். காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களில் பெரும்பாலோர் வல்லபாய் படேலின் பெயரை முன்மொழிந்தனர். நேருவை தலைவராக்க வேட்புமனுவை திரும்பப் பெறுமாறு காந்திஜி, படேலைக் கேட்டதால், அவர் உடனடியாக வாபஸ் பெற்றார்.
வரலாற்றில் படேலை ஓர் ஒளிரும் நட்சத்திரமாக மீண்டும் நிலைநிறுத்தியதன் முக்கிய பங்கு பிரதமர் நரேந்திர மோடியையே சாரும். ஆனால் சிலர் படேலின் மரபை மறைக்கவும், அழிக்கவும் முயன்றனர். ஆனால் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.
படேல் இறந்த பிறகு, பொது மக்கள் அவருக்கு ஒரு நினைவுச்சின்னம் கட்ட நிதி திரட்டினர். ஆனால் இந்த தகவல் நேருஜியை அடைந்ததும், சர்தார் படேல் விவசாயிகளின் தலைவர், எனவே இந்த பணத்தை கிராமத்தில் கிணறுகள் மற்றும் சாலைகள் கட்டுவதற்கு செலவிட வேண்டும் என்று அவர் கூறினார்.
என்ன ஒரு கேலிக்கூத்து. கிணறுகள் மற்றும் சாலைகள் கட்டுவது அரசாங்கத்தின் பொறுப்பு. அதற்காக நினைவு நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது அபத்தமானது.
நேருஜி தனக்குத்தானே பாரத ரத்னா விருது வழங்கிக் கொண்டார். ஆனால் அந்த நேரத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு ஏன் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை? ஒற்றுமை சிலையை கட்டியதன் மூலம் சர்தார் படேலை முறையாகக் கௌரவிக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்தார். இது நமது பிரதமரின் பாராட்டத்தக்க பணி" என்று ராஜ்நாத் சிங் கூறினார்.