

ஹைதராபாத்: பல இந்து தெய்வங்கள் இருப்பதை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கேலி செய்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகளான பாஜக மற்றும் பிஆர்எஸ் வலியுறுத்தியுள்ளன.
சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய ரேவந்த் ரெட்டி, "இந்துக்கள் எத்தனை கடவுள்களை நம்புகிறார்கள்? மூன்று கோடி கடவுள்கள் இருக்கிறார்களா? ஏன் இவ்வளவு பேர் இருக்கிறார்கள்? திருமணமாகாதவர்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார், ஹனுமன். இரண்டு முறை திருமணம் செய்பவர்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார். மது அருந்துபவர்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார். கோழி பலியிடுவதற்கு ஒரு கடவுள் இருக்கிறார்; பருப்புக்கும் அரிசிக்கும் ஒரு கடவுள் இருக்கிறார். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு சொந்த கடவுள் இருக்கிறார்" என்று அவர் கூறினார்.
ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கு பாஜக மற்றும் பிஆர்எஸ் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுபற்றி பேசிய பாஜக தலைவர் சிக்கோட்டி பிரவீன், "ரேவந்த் ரெட்டியின் கருத்துகளால் மாநிலம் முழுவதும் உள்ள இந்துக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸுக்கும் ரேவந்த் ரெட்டிக்கும் வெட்கமில்லை. எல்லா கூட்டங்களிலும், காங்கிரஸ் முஸ்லிம்களால் தான் இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். முதல்வர் மன்னிப்பு கேட்டு தனது கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும்" என்று அவர் கூறினார்.
பிஆர்எஸ் தலைவர் ராகேஷ் ரெட்டி அனுகுலா பேசுகையில், “கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ரேவந்த் ரெட்டி பேசுவது துரதிர்ஷ்டவசமானது. அவர் உடனடியாக இந்து சமூகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று தெரிவித்தார்.