

புதுடெல்லி: நேருவும் இந்திராவும்தான் வாக்குகளை திருடினார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டி உள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் தேர்தல் சீர்திருத்தம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) தொடர்பான விவாதம் 2-வது நாளாக நேற்றும் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு, மத்திய அரசு அல்ல. எனவே, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தத் தேவையில்லை. அதேநேரம், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை ஏற்று விவாதம் நடத்த அரசு சம்மதித்தது.
எஸ்ஐஆர் பணி நடைபெறுவது முதல் முறை அல்ல. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போதும் இப்பணி நடைபெற்றது. தேர்தலை நேர்மையாக நடத்துவதற்காகத்தான் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. சில வாக்காளரின் பெயர் இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் உயிரிழந்த லட்சக்கணக்கானவர்களின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதனால் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்கவே இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எஸ்ஐஆர் பணிகள் குறித்து பொய்யான தகவலை பரப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே தவறாக வழிநடத்துகின்றன.
தேர்தலில் நீங்கள் (காங்கிரஸ்) வெற்றி பெற்றால் வாக்காளர் பட்டியல் தூய்மையாக உள்ளது. ஆனால் தோல்வி அடைந்தால் வாக்காளர் பட்டியலை குறை கூறுவீர்கள். இந்த இரட்டை வேடம் வேண்டாம். தேர்தல் தோல்விக்கு உங்கள் தலைமைத்துவம்தான் காரணம். மின்னணு வாக்கு இயந்திரமோ வாக்காளர் பட்டியலோ காரணம் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமித் ஷா பேசிக்கொண்டிருந்தபோது ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் குறுக்கிட்டு பேசினர். இதனால் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
குறிப்பாக அமித் ஷா பேசும்போது, ‘‘தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெறுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் (ராகுல் காந்தி) கூறுகிறார். ஆனால் நாடு சுதந்திரம் அடைந்தபோது முதல் பிரதமரை தேர்ந்தெடுக்கும்போதுதான் முதல் முறையாக வாக்கு திருட்டு நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு தலா ஒரு வாக்குரிமை வழங்கப்பட்டது.
அப்போது, சர்தார் வல்லபபாய் படேலுக்கு 28 வாக்குகளும் ஜவஹர்லால் நேருவுக்கு 2 வாக்குகளும் கிடைத்தன. ஆனால், நேரு பிரதமரானார். அடுத்ததாக, இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கியது. இதுதான் மிகப்பெரிய வாக்கு திருட்டு” என்றார்.
அமித் ஷாவின் இந்தப் பேச்சைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.