உ.பி.யில் சூறைக்காற்று, கனமழையால் 89 பேர் உயிரிழப்பு - நிவாரணப் பணிகள் தீவிரம்

உ.பி.யில் சூறைக்காற்று, கனமழையால் 89 பேர் உயிரிழப்பு - நிவாரணப் பணிகள் தீவிரம்
Updated on
2 min read

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் திடீரென பெய்த கனமழை, சூறைக்காற்று, மின்னல் காரணமாக 89 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் பரேலி, பிரயாக்ராஜ், பதோஹி, மிர்சாபூர், ஃபதேபூர், பிரதாப்கர், தியோரியா, சோன்பத்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று திடீரென கனமழை பெய்தது, சூறைக்காற்று வீசியது, மின்னல் தாக்கியது. பருவ காலம் இல்லாத நிலையில் ஏற்பட்ட இந்த இயற்கைச் சீற்றத்தின்போது பலரும் மரங்களின் அடியிலும், மேம்பாலங்களின் கீழும் தஞ்சம் அடைந்தனர். மிக அதிக வேகத்தில் வீசிய காற்றால் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்தன. ஏராளமான வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.

புழுதிப்புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக நிவாரண ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதன்கிழமை மாலை வானிலை திடீரென மாறியது. புழுதிப் புயல் காரணமாக பார்வைத் திறன் குறைந்தது. விளம்பரப் பலகைகளும் தகரக் கூரைகளும் கிழிந்து பறந்தன. மிக அதிக வேகத்தில் வீசிய காற்றால் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. இதில், வாகனங்கள், வீடுகள் சிக்கி சேதமடைந்ததோடு, போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. பலர் மீட்கப்பட்டனர், காயமடைந்தவர்கள் அவசரமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ஆலங்கட்டி மழை, மின்னல் உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக உத்தரப்பிரதேசத்தில் 89 பேர் உயிரிழந்தனர். 53 பேர் காயமடைந்துள்ளனர். 114 கால்நடைகள் பலியாகி உள்ளன. 87 வீடுகள் சேதமடைந்துள்ளன.

<div class="paragraphs"><p>பதோஹி என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்கள்</p></div>

பதோஹி என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்கள்

பாதிப்புகளை அடுத்து நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். பாதிப்புகளை உணர்வுப்பூர்வமாக ஆய்வு செய்யுமாறும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதோடு, 24 மணி நேரத்துக்குள் நிதி உதவி அளிக்கப்படுவதையும் உறுதி செய்யுமாறும் அனைத்து மண்டல ஆணையர்களுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

சூறைக்காற்று, கனமழை, மின்னல் தொடர்பான பாதிப்புகள் குறித்த தகவல்களை ஒவ்வொரு மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை அனுப்புமாறு அனைத்து மாவட்டங்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளை சமூக ஊடகங்கள் வாயிலாக பரவலாகத் தெரியப்படுத்துமாறும் அதிகாரிகளை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மாவட்ட அதிகாரிகளுடன் நேரடி ஒருங்கிணைப்பை மேற்கொள்வதன் மூலம் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களுக்குத் தேவையான நிதி தற்போது வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in