

கொல்கத்தா: செல்போன் தொலைந்து போனதை தொடர்ந்து, தேசிய விருது பெற்ற விவசாயி ஒருவர் சைபர் மோசடியில் ரூ.83,244 இழந்துள்ளார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த விவசாயி ஷைலன் சாண்டி. இயற்கை வேளாண்மையை ஊக்குவித்ததற்காக இவர், கடந்த 2019-ம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளார். இவரது செல்போன் கடந்த மார்ச் 29-ம் தேதி தொலைந்து போனது. இது குறித்து காவல் நிலையத்தில் உடனே புகார் அளித்த அவர், மாற்று சிம் கார்டுக்கும் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் புதிய சிம் கார்டை பெற்ற பிறகு, மார்ச் 31ம் தேதி அவரது வங்கிக் கணக்கில் இருந்து இரு பரிவர்த்தனைகளில் ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதைக் கண்டு ஷைலன் சாண்டி அதிர்ச்சி அடைந்தார்.
ஏப்ரல் 1ம் தேதி சாந்திபூர் காவல் நிலையம் மற்றும் சைபர் க்ரைம் பிரிவில் தனித்தனியே புகார் அளித்தார். எனினும் மோசடி அத்துடன் நிற்கவில்லை. ஏப்ரல் 2-ம் தேதி மற்றொரு பொதுத்துறை வங்கியில் உள்ள அவரது கணக்கிலிருந்து 12 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.73,244 எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது.
இதையடுத்து அந்த விவசாயி, இரு வங்கிகளின் மேலாளர்கள், அவர்களின் நோடல் அதிகாரிகள், சைபர் கிரைம் பிரிவு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முதன்மை கிளைக்கு புகார் அனுப்பினார். அந்த இரு வங்கிக் கணக்குகளிலும் ஆன்லைன் பேங்கிங் வசதி செயல்பாட்டில் இல்லை, மேலும் ஷைலன் சாண்டியிடம் ஏடிஎம் கார்டும் இல்லை. ஏடிஎம் கார்டோ அல்லது ஆன்லைன் பேங்கிங் வசதியோ இல்லாமல், இவ்வளவு பெரிய தொகை எப்படி டிஜிட்டல் முறையில் எடுக்கப்பட்டது என்பதை வங்கி அதிகாரிகளாலேயே விளக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தொடர்ந்து நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பிய போதிலும், மூன்றரை மாதங்களுக்கும் மேலாகியும் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.