

பாட்னா: எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பிஹாரின் வளர்ச்சிதான் என் இலக்கு என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிஹாரின் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்தது. இந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்த பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரைவிட 19,000 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு தனியார் செய்தி ஊடகத்துக்குப் அளித்த பேட்டியில் பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பதாவது: பிஹார் அரசியலில் நான் கடந்த மூன்று ஆண்டுகளாக அயராது உழைத்து வருகிறேன். அதற்கு மக்கள் வெகுமதி அளித்துள்ளனர். குறிப்பாக சாதி மற்றும் சமூகத்தைத் தாண்டி வாக்களிக்குமாறு நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இந்த முறை அவர்கள் அதைச் செய்துள்ளனர். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பங்கிபூர் மக்கள் 3 மாதங்களுக்குள் ஒரு வெளிப்படையான மாற்றத்தைக் காண்பார்கள். இங்கு உள்ளூர் மட்டத்திலான ஊழலை ஒழிப்பதாக நான் வாக்களித்துள்ளேன். மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்பேன். பிஹாருக்கு ஒரு நல்ல முதலமைச்சரை உறுதி செய்வதுதான் என் இலக்கு. வேலை நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்வதைத் தடுத்து, கல்வியை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒரு அரசு தேவை.
கல்வித் துறையைப் பொறுத்தவரை, எனது தொகுதியில் ஒரு புதிய சோதனையைத் தொடங்கப் போகிறேன். இங்குள்ள அரசுப் பள்ளிகளில் வெளிப்படையான முன்னேற்றத்தை நான் உறுதி செய்வேன். ஒருவேளை அது நடக்கவில்லை என்றால், இப்பகுதியில் உள்ள ஏழைக் குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்குச் செல்ல வசதி செய்து தருவேன். இப்போது எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியமில்லை. எனது கவனம் பிஹாரின் வளர்ச்சியில்தான் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.