

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்துள்ள அலிகர், அம்மாநிலத்தின் கல்வி நகரம் என அழைக்கப்படுகிறது. அதேபோல், இங்கு பல்வேறு வகை பித்தளை கைவினைப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.
குறிப்பாக, அலிகர் மற்றும் அதன் அருகில் உள்ள முராதாபாத் ஆகிய இரு நகரங்களும் இந்து கடவுள்களின் சிலை வடிப்புக்கு மிகவும் பிரபலம்.
அதிலும் இந்து கடவுள்களின் சிலைகளை உருவாக்குவதும், அவற்றுக்கு மெருகூட்டுவதும் பெரும்பாலும் முஸ்லிம் தொழிலாளர்கள்தான். அலிகரின் ஜெய்கஞ்ச் அருகே உள்ள புகி சராய் பகுதியில் முஸ்லிம் கைவினைஞர்கள் சிலைகளுக்கு மெருகூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாராகும் விநாயகர், விஷ்ணு-லட்சுமி, ராமர் மற்றும் கிருஷ்ணர் சிலைகள் அதிகம் விற்பனையாகின்றன.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் அப்துல் பஹீம் கூறும்போது, “இரண்டாவது தலைமுறையாக நான் இப்பணியைச் செய்கிறேன். நாங்கள் செய்யும் தொழிலை இறைவனாகக் கருதுகிறோம். பித்தளையின் விலை உயர்ந்த பிறகு பணி குறைந்துவிட்டது. கைவினைஞர்களுக்கு போதிய வசதிகளை இதுவரை எந்த அரசும் செய்து தரவில்லை” என வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.
அலிகரில் சிலைகளை வடிக்கும் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த முகமது ஷபாப் அகமது கூறும்போது, “எங்கள் நிறுவனத்தில் ஐந்து வயது முதலே தெய்வங்களின் சிலைகளை மெருகூட்டும் பணியில் ஈடுபட்டுள்ள பல கைவினைஞர்கள் உள்ளனர்” என்றார்.
முகமது ஃபைசான் கூறும்போது, “பித்தளை விலை உயர்வால் வேலை குறைந்துவிட்டதால், தினசரி ஊதியமும் குறைந்துவிட்டது” என்றார்.
7 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றி வரும் முகமது அர்பாஸ், தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும் வருமானம் அதிகரிக்கும்போது திருமணம் செய்துகொள்வேன் என்றும் கூறுகிறார்.
உ.பி.யில் சிலை வடிப்பது தொடர்பான பயிற்சிப் பட்டறைகளோ, கைவினைஞர்கள் கற்றுக்கொள்வதற்கான இடமோ அல்லது புதிய இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான வசதியோ எதுவும் இல்லை என்பது அவர்களின் ஆதங்கமாக உள்ளது. தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்து தொழிலை கற்றுக் கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.