

புதுடெல்லி: தங்கள் மசூதிக்காக சீக்கியர்கள் நிலம் வழங்கியது போல், குருத்வாரா கோயில் கட்ட முஸ்லிம்களும் நிலத்தை தானமாக வழங்கினர். பஞ்சாப் கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாக நெகிழ்ச்சியை தந்துள்ளது.
சீக்கியர்களால் மசூதிகள் கட்டுவதற்கு நிலத்தை நன்கொடையாக வழங்கியதைப் போலவே, கோயில் கட்டுமானத்துக்காக நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பின் மொஹாலி மாவட்டத்தின் ஜாம்பூர் கிராமத்தில் ஒரு கோயில் கட்ட முடிவானது. இதற்காக ரூ.80 லட்சம் மதிப்புள்ள 325 சதுர கெஜம் நிலத்தை ஒரு முஸ்லிம் குடும்பம் நன்கொடையாக வழங்கியுள்ளது.
பஞ்சாப்பின் மொஹாலி மாவட்டத்தில் ஜாம்பூர் எனும் கிராமம் உள்ளது. இங்கு ஒரு கோயில் கட்டுவதற்கு உள்ளூர் இந்து மக்கள் அனைத்து சமூக மக்களையும் தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளனர். இதற்காக, பஞ்சாப்பின் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஹேப்பி மாலீக் எனும் முகமது இம்ரான் (37) அக்கிராமத்திலுள்ள தனது நிலத்தை தாமாக அளிக்க முன்வந்தார்.
ரூ.80 லட்சம் மதிப்பிலான அந்த நிலத்தின் அளவு 325 கெஜம் ஆகும். இந்த நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, கடந்த பிப்ரவரி 12-இல் ஜாம்பூரில் நடைபெற்றது. இவ்விழாவில் லூதியானைச் சேர்ந்த பஞ்சாபின் ஷாஹி இமாம் மவுலானா முகமது உஸ்மான் ரெஹ்மான் கலந்து கொண்டார். இவரது முன்னிலையில், தொழிலதிபர் ஹேப்பி மாலீக் தனது நிலத்தின் ஆவணங்களை ஜாம்பூர் இந்துக்களிடம் ஒப்படைத்தார்.
இந்த மனதைத் தொடும் செயல், அம்மாநில அனைத்து சமூகங்களுக்கு இடையே நிலவும் நீண்டகால மதநல்லிணக்கப் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டுகிறது. இந்து கோயிலுக்கான நிலத்தை நன்கொடையாக வழங்கிய ஹேப்பி மாலீக், அதன் கட்டுமான செலவுகளையும் ஏற்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து பஞ்சாப்பின் ஷாஹி இமாமான மவுலானா முக்கமது உஸ்மான் கூறுகையில், ’ஜாம்பூரில் கோயில் கட்டுவதற்கு நிலம் கிடைக்கவில்லை. ஏனெனில், கிராமத்தில் வளர்ந்து வரும் மக்கள் தொகையால் பெரும்பாலான நிலங்கள் குடியிருப்புகளால் நிரம்பி விட்டன.
இதனால், சனாதன கோயில் கட்டுவதற்கு ஒரு நிலம் தேவை எனக் கூறி அக்கிராமத்தின் பண்டிதரான ராஜா ராம் என்பவர் ஹேப்பி மாலீக்கை அணுகினார். நமது இந்து சகோதரர்களுக்கு ஒரு நன்மையை கொண்டு வர முடிந்தால், இதை விட பெரிய மகிழ்ச்சி எதுவும் இருக்க முடியாது’ எனத் தெரிவித்தார்.
இது குறித்து கிராமவாசியான பண்டிதர் ராஜா ராம் கூறுகையில், ‘எங்களில் யாரும் இந்து, முஸ்லிம், சீக்கியர் அல்லது கிறிஸ்தவர் எனக் கூறியது இல்லை. ஏனெனில், நாங்கள் அனைவரும் சகோதரர்கள். இம்ரான் உடலுக்குள் இருக்கும் ரத்தம் தான் எங்கள் உடலிலும் உள்ளது’ எனத் தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன்பு, இரண்டு இந்து சகோதரர்களும் ஒரு வயதான சீக்கியப் பெண்ணும் இணைந்து பஞ்சாப்பில் ஒரு மசூதி கட்டுவதற்கு தானமாக நிலம் கொடுத்தனர். அந்த வகையில், தற்போது ஒரு முஸ்லிம் கோயிலுக்காக தனது நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.