

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் 25 சதவிகிதம் முஸ்லிம்கள் உள்ளனர். குறிப்பாக தலைநகர் கொல்கத்தாவின் 17 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வெற்றியைத் தீர்மானிப்பது முஸ்லிம்கள்தான்.
கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் கொல்கத்தாவின் இந்த 17 தொகுதிகளையும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. ஆனால், இந்த முறை ஆளும் திரிணமூல் கட்சி மீண்டும் பெறுமா அல்லது பாஜக தட்டி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொல்கத்தாவின் மெட்டியாபுருஸ் தொகுதியில் சுமார் 60 சதவிகித முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இந்நகரின் துறைமுகத் தொகுதியில் சுமார் 51 சதவிகிதம் மற்றும் பாலிகஞ்ச் தொகுதியில் 50 சதவிகிதம் முஸ்லிம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தத் தொகுதிகள் அதன் வேட்பாளர் வெற்றி, தோல்வியை நேரடியாக முஸ்லிம்கள் தீர்மானிக்கும் வகையில் அமைந்துள்ளன. என்டலி மற்றும் சவுரிங்கி போன்ற தொகுதிகளில் முஸ்லிம் மக்கள் தொகை சுமார் 40 சதவீதமாகவும் உள்ளனர்.
இம்முறை கொல்கத்தாவின் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறர். அதனால் இந்தத் தொகுதி அனைவரின் கவனத்தில் உள்ளது.
மேலும், சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ஜிப் பிஸ்வாஸ், காங்கிரஸில் பிரதீப் பிரசாத் போட்டியிடுகின்றனர். அத்துடன் புதிய முஸ்லிம் கட்சி தொடங்கியுள்ள ஹுமாயூன் கபீர், தனது ஜேயுபி சார்பில் பூனம் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளார்.
வாக்குரிமை இழப்பு: இத்தொகுதியில் 76 சதவீத வாக்காளர்கள் இந்துக்கள். சுமார் 24 சதவீதம் பேர் முஸ்லிம்கள். தவிர பவானிபூரில் உ.பி., பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. இவர்களுடைய வாக்குகள் முஸ்லிம் வாக்குகளில் இருந்து மாறுபடும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, பல லட்சம் முஸ்லிம்கள் வாக்குரிமையை இழந்துள்ளனர். எனவே, பவானிபூர் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிய வரும்.