

முகேஷ் அம்பானி
புதுடெல்லி: “பிரதமர் மோடி காலத்தில்தான் இந்தியா ஒரு உலகளாவிய சக்தியாக மாறியது என்பதை வரலாறு பதிவு செய்யும். பிரதமர் மோடி இந்தியாவின் பாதுகாப்பு அரணாக இருக்கிறார்,” என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் நடந்த ‘வைப்ரண்ட் குஜராத்’ மாநாட்டில் பேசிய முகேஷ் அம்பானி, “கடந்த ஐந்து ஆண்டுகளில், நாங்கள் ரூ.3.5 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த முதலீட்டை ரூ.7 லட்சம் கோடியாக இரட்டிப்பாக்கி, ஒவ்வொரு இந்தியருக்கும் அபரிமிதமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். புவிசார் அரசியல் சூழ்நிலை, எதிர்பாராத சில பதற்றங்கள் உட்பட புதிய சவால்களை உருவாக்கி வருகிறது.
இருப்பினும், இந்தியா இவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த சவால்கள் நமது மக்களைத் தொடவோ அல்லது தொந்தரவு செய்யவோ முடியாது என்பதுதான் இந்தியாவுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்.
ஏனென்றால், இந்தியாவின் அசைக்க முடியாத பாதுகாப்பு அரணாக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். உலக அரங்கில் இந்தியாவின் நம்பிக்கையை அவர் மீட்டு எடுத்துள்ளார். மோடி காலத்தில்தான் இந்தியா ஒரு உலகளாவிய சக்தியாகவும் மாறியது என்பதை வரலாறு பதிவு செய்யும்.
2036 ஒலிம்பிக் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டிருக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்க ரிலையன்ஸ் அறக்கட்டளை தயாராக உள்ளது.” என்றார்.