

போபால்: 2019-ல் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 50 லட்சம் வென்ற மத்தியபிரதேச மாநில அரசு பெண் அதிகாரி ரூ. 2.5 கோடி நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் அமிதா சிங் தோமர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.50 லட்சம் பரிசு வென்றிருந்தார். இதனால் நாடு முழுவதும் இவர் பிரபலமானார்.
மேலும், இவர் மத்திய பிரதேச மாநில அரசில் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரை போலீஸார் கைது செய்தனர். கடந்த 2021-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ள நிவாரண நிதியை அரசு வழங்கியது. அந்த நிதியை பரோடா பகுதியில் விநியோகம் செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. ரூ.2.5 கோடி பணம் போலியான வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து பரோடா போலீஸ் அதிகாரி அவ்நீத் சர்மா தலைமையிலான படையினர், அமிதா சிங் தோமரை அவரது வீட்டில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்தனர். அமிதா சிங் தோமர், தற்போது விஜய்பூர் தாசில்தாராக உள்ளார். இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமிதா சிங் தோமர் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் தாசில்தார் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று மாவட்ட ஆட்சியர் அர்பித் வர்மா தெரிவித்துள்ளார்.