

கோப்புப் படம்
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் வனப்பகுதியில் தனியாக வாழ்ந்த ‘மோக்லி சிறுமி’யாக கருதப்படுபவர் எஹ்சாஸ். வன வாழ்க்கையிலிருந்து மீட்கப்பட்டு மறுவாழ்வு சிகிச்சை பெற்று வந்தவர் தனது 18 வயதில் உடல்நல பாதிப்பால் ஜூன் 15-ல் காலமானார். இந்தத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இவர், இந்தியாவின் ‘மோக்லி சிறுமி’ என்று அழைக்கப்பட்டவர். ஏனெனில், உ.பி.யின் பைரைச் மாவட்டத்தின் கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தின் காடுகளில் சிறுமியான இவர் தனியாகவே வாழ்ந்து வந்தவர்.
வனவிலங்குகளுடன் வாழ்ந்தவருக்கு அவற்றின் மீதான அச்சம் இல்லாமல் இருந்துள்ளது. சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தின் மோதிப்பூர் பகுதியின் சாலையில் அவர் அலைந்து திரிந்துள்ளார்.
அப்போது, வனவிலங்கு காவலர்களால் 2017 ஜனவரியில் முதன்முதலில் வெளி உலகிற்கு தெரிய வந்தார். அந்த சமயத்தில், அச்சிறுமிக்கு பொது மனித சமூகத்துடன் மிகக் மிகக் குறைந்த தொடர்பே இருந்துள்ளது.
சாதாரண மனிதர்கள் போல் அன்றி அவர் விலங்குகளைப் போல், நான்கு கால்களிலும் நடந்துள்ளார். பொதுமக்கள் கண்களில் படுவதை அவர் அதிகம் தவிர்த்து வந்துள்ளார். ஆடை அணியவும் மறுத்தவர், அலறல்கள் மற்றும் சைகைகளை தம் மொழியாகக் கொண்டிருந்தார்.
அச்சிறுமி கண்டுபிடிக்கப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக, அவர் ருட்யார்ட் கிப்ளிங்கின் கற்பனை காட்டுக் குழந்தையான ‘மோக்லி’யுடன் ஒப்பிடப்பட்டார். கிப்ளிங்கின் பிரபல 'தி ஜங்கிள் புக்' கதையில் வரும் 'மோக்லி' என்ற கற்பனைப் பாத்திரம் சர்வதேச அளவில் குழந்தைகளுக்கான கார்ட்டூன் சித்திரங்கள் மற்றும் திரைப்படங்களாக பிரபலானது.
எனவே, அச்சிறுமியை உ.பி. வாசிகள் ‘மோக்லி சிறுமி’ என்று அழைத்தனர். ஜனவரி 2017-ல் உ.பி. அரசின் வனவிலங்கு காவலர்களால் மீட்கப்பட்ட அச்சிறுமி, பஹ்ரைச்சில் உள்ள குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அச்சிறுமிக்கு பூஜா எனப் பெயரிடப்பட்டிருந்தது.
பின்னர், பைரச்சியிலிருந்து பூஜா, லக்னோவில் உள்ள நிர்வாண் ராஜ்கிய பால் கிருஹ் விசேஷிக்ரித்திற்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பூஜா எனும் பெயர் மாற்றி ’எஹ்சாஸ்’ என்று மறுபெயரிடப்பட்டது.
இந்நிலையில், எஹ்சாஸுக்கு கடுமையான நுரையீரல் தொற்று இருந்துள்ளது. மருத்துவப் பரிசோதனைகளில், அவரது மூளை முழுமையாக வளர்ச்சியடையவில்லை எனத் தெரிந்தது.
இத்துடன், அவர் அறிவுசார் குறைபாடு மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் கண்டறியப்பட்டது. இதற்காக, லக்னோவில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இத்தகைய சவால்களுடன் எஹ்சாஸுக்கு, பல ஆண்டு காலமாக பராமரிப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்தன. இதில், எஹ்சாஸுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைத்ததை அடுத்து கடந்த ஜூன் 11 அன்று அவர் மருத்துவமனையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.
எனினும், ஜூன் 15 அன்று அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதனால், மீண்டும் மருத்துவமனைக்கு எஹ்சாஸ் உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே எஹ்சாஸ், பரிதாபமாக உயிரிழந்தார். இவர், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை எஹசாஸ் லக்னோவின் இல்லத்தில்தான் கழித்தார்.
அங்கு பல வருட மருத்துவ சிகிச்சை, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவை கிடைத்து வந்தன. இதன் பலனாக எஹ்சாஸ், மக்கள் மத்தியில் வாழப் படிப்படியாகப் பழகிக்கொண்டார்.
காலப்போக்கில், அவர் தன் ஆடையை தானே அணியவும், பராமரிப்பாளர்களை அடையாளம் காணவும், பாசத்திற்குப் பதிலளிக்கவும் கற்றுக்கொண்டார். தனது நேரடிப் பராமரிப்பாளரான ராணி என்பவருடன் எஹ்சாஸுக்கு நெருக்கமான நட்பு இருந்தது.
தன்னை பாசத்துடன் 'அம்மா' என்று அழைத்து வந்த எஹ்சாஸின் இறப்பு குறித்து ராணி கூறும்போது, ‘அவள் என்னை அம்மா என்றுதான் அழைப்பாள். அவள் குணமடைந்து விடுவாள் என்று நான் அதிகம் நம்பினேன். இப்போது, அவளுடைய நினைவுகள் மட்டுமே எங்களிடம் உள்ளன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.