

போபால்: மகன் இறந்து 5 நாட்களாக சடலத்துடன் காத்திருந்த தாய் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகியுள்ளது. மகன் மீண்டும் உயிர் பெற்று வருவதற்காக அந்தத் தாய் பிரார்த்தனை செய்தவாறு 5 நாட்கள் இருந்துள்ளார்.
இதுகுறித்து மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்ட போலீஸ் எஸ்.பி. ரோஹித் கஷ்வானி கூறியதாவது: விதிஷா பகுதியில் 42 வயதான பேஷன் டிசைனர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் வீடு வீடாக பால் விநியோகம் செய்பவர் போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது மகனின் சடலத்துடன் தாய் இருந்துள்ளார்.
மகன் இறந்து 5 நாட்களாகியும் சடலத்தை விட்டு அகலாது அந்தத் தாய் பிரார்த்தனை செய்தவாறு இருந்துள்ளார். மகன் மீண்டும் உயிர் பெற்று வருவதற்காக அவர் பிரார்த்தனை செய்தவாறு இருந்துள்ளார். மேலும், வீட்டில் எந்தவித சம்பவமும் நடக்காதது போலவே வீட்டின் அனைத்து வேலைகளையும் அந்தத் தாய் பார்த்து வந்துள்ளார். இதையடுத்து தாயை மீட்ட போலீஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மகனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்தத் தாயார், ஓய்வு பெற்ற ஆசிரியை. ஆசிரியையின் கணவர் இறந்த பின்னர் மகனுடன் அவர் வசித்து வருகிறார். அவருக்கு மொத்தம் 3 மகன்கள். மீதமுள்ள 2 பேரும், வெளிநாடுகளில் செட்டிலாகி வசித்து வருகின்றனர். மகன் இறந்த விரக்தியிலும், அவரை மீட்டு வருவதற்கான முயற்சியிலும் அவர் பிரார்த்தனை செய்தவாறு இருந்துள்ளார்.
மகன் இறந்த செய்தியை அவரது உறவினர், அண்ணன்களிடம் தெரிவித்துள்ளோம். பால்காரர் கொடுத்த தகவலின் பேரில் அவரை மீட்டோம். பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் மகனின் சாவுக்கு என்ன காரணம் என்பது தெரியும். அந்தத் தாயிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். மகனின் சடலத்துடன் 5 நாட்கள் தாய் இருந்த செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.