

புதுடெல்லி: ‘‘மும்பை தாராவி மறுசீரமைப்புத் திட்டம் என்பது மனிதகுல மாற்றத்துக்காக உலகிலேயே மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய சவாலான முயற்சியாகும்’’ என்று அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி நேற்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மே தினத்தையொட்டி தனது குழுமத்தைச் சேர்ந்த 4 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களிடையே கவுதம் அதானி நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மும்பை தாராவி மறுசீரமைப்புத் திட்டம் எனது வாழ்நாளில் நான் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான பணிகளில் ஒன்று. அது எனது இதயத்துக்கு மிக நெருக்கமானதும் கூட. இது வெறும் கட்டுமானத் திட்டம் மட்டுமல்ல; மனிதகுல மாற்றத்துக்காக உலகிலேயே மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய சவாலான முயற்சியாகும்.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாகவும், மும்பையின் மிக நெருக்கமான மக்கள் குடியிருப்புப் பகுதியாகவும் தாராவி அறியப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், தாராவி திட்டத்தை செயல்படுத்துவதைத் தொழில்முறை ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் இதை ஒரு பெரும் பொறுப்பாகவே கருதுகிறேன். இதில் உள்ள இமாலய சவால்களை முழுமையாக உணர்ந்தே இப்பணியை நான் ஏற்றுக் கொண்டேன்.
இதனை நாங்கள் லாப நோக்கத்துக்காகச் செய்யவில்லை. ஒரு வகையில், தாராவி நமது கூட்டுத் தோல்வியின் அடையாளமாகத் திகழ்வதால், அந்த நிலையை மாற்றியமைக்கும் கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது.
உத்வேகம் அளிப்பவை: தாராவி மக்களின் மன உறுதி பாராட்டுதலுக்கு உரியது. அங்கு வசிக்கும் மக்களின் உழைப்பும், முன்னேறத் துடிக்கும் அவர்களின் வேட்கையும், போராட்டங்களுக்கு இடையிலும் தளராத அவர்களின் மன வலிமையும் எனக்கு எப்போதும் உத்வேகம் அளிப்பவையாக உள்ளன.
எனினும், அவர்களுக்கு உரிய வாழ்க்கைத் தரத்தை நம்மால் இதுவரை வழங்க முடியவில்லை. அந்த நிலையை மாற்றவே தாராவி திட்டத்தைச் சவாலாக ஏற்று செயல்படுத்த ஒப்புக்கொண்டேன். இவ்வாறு அதானி கூறினார்.
கூட்டு முயற்சி: மகாராஷ்டிர அரசு மற்றும் அதானி குழுமத்தின் கூட்டு முயற்சியாக, சிறப்பு நோக்கு நிறுவனம் (எஸ்பிவி) மூலம் பொது - தனியார் பங்களிப்புடன் மும்பை தாராவி மறுசீரமைப்புத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய நகர்ப்புற புத்துயிரூட்டல் திட்டம் என்றும், மும்பையைக் குடிசைகளற்ற நகரமாக மாற்றுவதற்கான முதல் அடி என்றும் வர்ணிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், தாராவியில் தகுதியுள்ள குடியிருப்பாளர்களுக்குத் தனித்தனியாகச் சமையலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய குறைந்தபட்சம் 350 சதுர அடி பரப்பளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட உள்ளன. இது மும்பையின் வழக்கமான குடிசை மறுவாழ்வுத் திட்டங்களை விட 17 சதவீதம் கூடுதல் இடவசதி கொண்டதாக இருக்கும்.