

பிரதமர் நரேந்திர மோடி தனது 76-வது வயதில் இன்று அடியெடுத்து வைக்கிறார். இந்த 75 வயதில் அவர் அடைந்துள்ள உயரம், ஏற்படுத்தியுள்ள தாக்கம் அசாதாரணமானது. ஒரு சாதாரண தேநீர் விற்கும் சிறுவனாக இருந்தவர், இன்று உலகின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார்.
தோல்வியைச் சந்திக்காத தொடர் முதல்வராகவும், தொடர் பிரதமராகவும் 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகிறார். அரசுப் பதவியை அதிக காலம் தொடர்ந்து வகிப்பவர் அவர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் பதவிக் காலத்தில் நேருவை பின்னுக்குத் தள்ளியவர் அவர். அவரது காலத்தில்தான் பாஜக உலகின் மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. 240 மக்களவை உறுப்பினர்களையும், 117 மாநிலங்களவை உறுப்பினர்களையும் கொண்டிருப்பதோடு, 22 மாநிலங்களில் ஆளும் கட்சியாகவும் அது திகழ்கிறது.
அரசியலுக்காக அவர் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறார். ஆனாலும், தவறான நடத்தைக்காக அவர் விமர்சிக்கப்படுவதில்லை. அவரது நடத்தை எதிர்ப்பாளர்கள் பலரை அவர்பால் ஈர்த்துள்ளது. கொள்கைக்கு உட்பட்டும், கொள்கைக்கு அப்பாற்பட்டும் அவரை ஆதரிக்கும் பலரை அவர் பெற்றுள்ளார்.
அறிவுத் தளத்தில், கொள்கை ரீதியாக நரேந்திர மோடியை தொடர்ந்து எதிர்த்து வந்தவர்களில் ஒருவர் மூத்த பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர். பின்னாளில் அவர் மோடி ஆதரவாளராக மாறினார். தான் மாறியதற்கான காரணம் குறித்து மார்ச், 2014-ல் அவர் ஒரு கட்டுரை எழுதினார்.
அந்தக் கட்டுரையில், “பொதுவெளியில் பேசுபவர் யாராக இருந்தாலும் அவர்கள் மேடையேறுவதற்கு முன் ஏதோ ஒரு வகையில் தயாராகித்தான் வருகிறார்கள். ஆனால், யாரும் முழுமையாக தயாராக முடியாத ஒரு சூழல் உண்டு என்றால் அது திடீரென ஏற்படும் நெருக்கடி நிலைதான். அதிலும் ஒரு நபரின் உயிருக்கே ஆபத்து நேரிடுவது என்பதைவிட அவருக்கு பெரிய நெருக்கடி வேறில்லை. அத்தகைய தருணத்தில் அவரின் எதிர்வினை பகுத்தறிவு சார்ந்து இருப்பதைவிட, உணர்ச்சிப்பூர்வமான மனதில் இருந்தே வெளிப்படுகிறது.
நரேந்திர மோடியின் பாட்னா பேரணியில் குண்டுகள் வெடித்தன. அவை அங்கு கூடியிருந்த மக்களை மட்டுமல்ல, அவரையும் குறிவைத்தே வீசப்பட்டவை. அப்போது அவரிடம் இருந்து வெளிப்பட்ட உடனடி எதிர்வினை மிகவும் கவனிக்கத்தக்கது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இரு தரப்பிடமும் அவர் ஒரு வலிமையான கேள்வியை முன்வைத்தார். அது நம் நாட்டின் முக்கிய சவாலின் மையப் புள்ளியைத் தொடுவதாகவும், அதற்கான தீர்வை கொண்டிருப்பதாகவும் அமைந்திருந்தது. அந்த இரண்டு பெரும் சமூகங்களையும் ஒரு முடிவை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்: அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்ளலாம், அல்லது வறுமை எனும் அவமானகரமான சாபத்தை எதிர்த்து ஒன்றிணைந்து போராடலாம். இப்படித்தான் மோடி எதிர்வினையாற்றினார்.
மோடி உணர்ச்சிவசப்பட்டிருந்தால் கூட யாரும் அவரை குறை சொல்லி இருக்க மாட்டார்கள் என்ற சூழலிலும் அவர் தெளிவான பார்வையுடனும், ஒரு பொருளாதாரக் கண்ணோட்டத்தை செயல்படுத்தும் உறுதியுடனும் செயல்பட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மோடி ஆற்றிய உரையில், பொதுச் சேவையில் இருப்பவர்களின் மதம் இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் என்று கூறி இருந்தார்.
அவர் மீதான விமர்சனங்களில் எப்போதும் இடம்பெறக்கூடியது குஜராத் கலவரம். அந்த கலவரம் நடந்தபோது மற்ற பத்திரிகையாளர்களைப் போலவே நானும் அது குறித்து கேள்விகளை எழுப்பி இருந்தேன். முரண்பாடான விஷயம் என்னவென்றால் இந்த கேள்விகளுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கமே தனது 10 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் பதில் அளித்துவிட்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துக்கு விசுவாசமான அமைப்புகள் மோடிக்கு எதிராக 10 ஆண்டுகளாக தீவிர விசாரணையை மேற்கொண்டன. மோடிக்கு எதிராக ஏதேனும் ஒரு ஆதாரத்தையாவது கண்டறியும் பணி அரசின் ஒவ்வொரு முக்கிய அமைப்பிடமும் ஒப்படக்கப்பட்டது. ஆனால், அவர்களால் அப்படி எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. உச்ச நீதிமன்ற விசாரணையிலும் மோடி குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டுவிட்டது...” என்று மோடியின் புகழ்பாடும் இந்தக் கட்டுரையில் இன்னும் பல விஷயங்கள் உள்ளன.
தமது தொடக்ககால அரசியல் கண்ணோட்டத்தின் பின்னணியிலேயே அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் காலமெல்லாம் எடை போடும் பத்திரிகையாளர்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில், நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த எம்.ஜே. அக்பர் இவ்வாறு வெளிப்படையாக தனது பார்வை மாற்றத்தை வெளிப்படுத்தியது சக பத்தரிகையாளனாக எனக்கு ஆச்சரியத்தையே அளித்தது.
ஆனாலும், எம்.ஜே.அக்பரின் கீழ் பணிபுரிந்து அவரைப் பற்றி நன்கு அறிந்த ஒரு மூத்த பத்திரிகையாளர், அவரின் ஆளுமை குறித்து பேசி நான் கேட்டிருந்ததால் அந்த ஆச்சரியம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெறுவாரா, பிரதமர் ஆவாரா என்பது தெரியாத ஒரு காலகட்டத்தில் துணிந்தும் வெளிப்படையாகவும் அவரை ஆதரித்தவர் எம்.ஜே.அக்பர். ஆதரவாளராக மட்டுமின்றி, பாஜகவிலும் இணைந்து, அக்கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெளியுறவுத் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தவர் அவர்.
எம்.ஜே.அக்பர் ஒரு ரகம் என்றால், ஷெஹ்லா ரஷீத் வேறொரு ரகம்.
ஆகஸ்ட் 5, 2019-ல் துணிச்சலான ஒரு முடிவை மோடி அரசு எடுத்தது. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அது மாற்றியது.
இது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசின் முடிவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றன.
அப்படியான ஒரு தொடர் போராட்டம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் சார்பில் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தை முன்னெடுத்த முக்கியமானவர்களில் ஒருவர் சங்கத்தின் துணைத் தலைவரும், அரசியல் செயல்பாட்டாளரும், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவருமான ஷெஹ்லா ரஷீத்.
இந்தியிலும் ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசக்கூடிய அவர், சக மாணவர்களை ஒன்று திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்தவர். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு உரிமைகளை ஆபத்தில் ஆழ்த்தி இருப்பதாக ஆதரவாளர்கள் மத்தியில் ஆழமாக பதியவைத்த ஷெஹ்லா ரஷீத், பாஜகவுக்கு எதிராகவும், நரேந்திர மோடிக்கு எதிராகவும் தொடர் பரப்புரைகளை மேற்கொண்டார்.
எனினும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட ஆரோக்கியமான மாற்றங்களைப் பார்த்து மோடி ஆதரவாளராக மாறினார். நவம்பர் 2023-ல் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "தற்போது நாம் நல்ல நோக்கத்துடன் செயல்படும் ஒரு நிர்வாகத்தைக் காண்கிறோம். பிரதமர் விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. தனது செல்வாக்கு சரிந்தாலும் பரவாயில்லை என்று கருதி பல துணிச்சலான முடிவுகளை அவர் எடுத்துள்ளார்.
அவர் விமர்சனங்களைப் பொருட்படுத்துவதில்லை. நாட்டின் நலனுக்காக உழைக்கும் சுயநலமற்ற மனிதர் அவர். உள்துறை அமைச்சரும், அக்காலத்தில் யார் என்ன விமர்சித்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை அவர் நிலைநாட்டியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் கொள்கைகளே காரணம். அங்கு நடைபெற்று வந்த போராட்டங்கள், கிளர்ச்சிகள் மற்றும் ஊடுருவல் சம்பவங்களுக்கு அவர்கள் ஒரு அரசியல் தீர்வை உறுதி செய்துள்ளனர்.
அந்தச் சூழலை மாற்ற ஒரு துணிச்சலான நடவடிக்கை தேவைப்பட்டது. அதை அவர்கள் செய்தார்கள். அதற்காக அரசாங்கத்துக்கு, குறிப்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு நான் பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுக்கி, ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக ஷெஹ்லா ரஷீத் பணியாற்றி வருகிறார். இவர் பாஜகவில் இணைய இருப்பதாக பேசப்பட்ட போதிலும் அவர் இணையவில்லை.
எம்.ஜே.அக்பர் மோடியின் கொள்கை ஆதரவாளராகவும் மாறிய நிலையில், ஷெஹ்லா ரஷீத்தோ, கொள்கை ஆதரவாளராக அல்லாமல் செயல்பாட்டுக்கு மட்டும் ஆதரவு அளிப்பவராக தொடர்கிறார்.