பெங்களூரு: வாக்குத் திருட்டு செய்தே நரேந்திர மோடி பிரதமராகி இருக்கிறார் என குற்றம்சாட்டியுள்ள சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே, உயிருடன் இருப்பவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகவும் பெங்களூருவில் உள்ள சுதந்தர பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
‘மக்கள் நீதிமன்றம்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, நடிகர் பிரகாஷ் ராஜ், யூடியூபர் துருவ் ராட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் நீக்கப்பட்ட பால்கி, பாபலேஷ்வர் உள்ளிட்ட வட்டங்களைச் சேர்ந்த மக்களுடன் கன்னட எழுத்தாளர் தேவனூரு மகாதேவாவும் இதில் கலந்து கொண்டார்.
அபிஜித் தீப்கே பேசும்போது, “நரேந்திர மோடி வாக்குத் திருட்டு செய்தே வெற்றி பெற்றார். உயிருடன் இருப்பவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டார்கள். நரேந்திர மோடியால் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட மரணம் இது. சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மூலம் மக்களின் உரிமையை தன்வசப்படுத்த விரும்புகிறார் மோடி. இது ஆர்எஸ்எஸ் மற்றும் கோட்சேவின் சித்தாந்தம்.
நேரு இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழ்ந்தவர். வாக்குரிமை என்றால் என்னவென்றே தெரியாத மக்களுக்கு அதை அவர் வழங்கினார். ஆனால் நரேந்திர மோடியோ, வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளார். ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது வெறும் முழக்கம் மட்டுமே. ஆனால், அதன் உண்மையான நோக்கம் ‘ஒரே நாடு; ஒரே கட்சி’ என்பதுதான்.
2024 தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 2% மட்டுமே. அதனால்தான் இந்த வாக்குத் திருட்டு நடந்தது. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூறியவர்களுக்கு தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை அளித்தன.
இந்தியா முழுவதும் வரைவுப் பட்டியலில் இருந்து 13 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் மூலம் பாஜக தனது வெற்றி வித்தியாசத்தை அதிகரித்துள்ளது.
மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் என நரேந்திர மோடியை எதிர்த்த அனைவரும் இம்முறை தோல்விடைந்துவிட்டனர்.
அவர்கள் எங்களை கரப்பான்பூச்சி என்று அழைக்கிறார்கள். ஏனென்றால், கரப்பான்பூச்சியைப் போல நாங்கள் வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், நாங்களோ கரப்பான்பூச்சியைப் போல உறுதியுடன் இருக்க விரும்புகிறோம். வீதிகள் இளைஞர்களுக்குச் சொந்தமானவை. நாங்கள் தேசத்தையும் ஜனநாயகத்தையும் மீட்டெடுப்போம். மோடி தனது சர்வாதிகாரத்தை திணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, அகில இந்திய மாணவர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஒரே நோக்கோடு கலந்து கொண்டுள்ளன. இது வெறும் வாக்கு திருட்டு மட்டுமல்ல. சிறப்பு தீவிர திருத்தம் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்த நாட்டையும் அவமதித்துள்ளது.
இதற்கு முன், புதிய வாக்காளர்களைப் பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகள் வீடு வீடாகச் செல்வார்கள். ஆனால் இப்போது, வாக்காளர்கள் தங்கள் பெயர் ஏன் நீக்கப்பட்டது என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நாட்டில் யார் அரசாங்கத்தை அமைப்பது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். ஆனால், எஸ்ஐஆர் மூலம் யார் வாக்களிக்க வேண்டும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்கிறது. இது ஒரு தூய்மைப்படுத்தும் நடவடிக்கை அல்ல. நீக்கப்பட்ட பெயர்கள் வெறும் எண்கள் அல்ல. இதில் ஒரு குறிப்பிட்ட பாணி உள்ளது. நீக்கப்பட்டவர்கள் அனைவரும் சிறுபான்மையினர், பழங்குடியினர், முஸ்லிம் வாக்காளர்களாகவே உள்ளனர்.
இந்த போராட்டத்தின் நோக்கம் ஞானேஷ் குமாரை நீக்குவது மட்டுமல்ல. எஸ்ஐஆர் முறையை ரத்து செய்வதே இதன் நோக்கம். எஸ்ஐஆர் ரத்து செய்யப்பட வேண்டும். ஞானேஷ் குமார் மீது வழக்கு தொடரப்பட வேண்டும். அதுவரை இந்தப் போராட்டம் ஓயாது” என தெரிவித்தார்.