‘‘மெகா காட்டாட்சியில் இருந்து மேற்கு வங்கம் விடுதலை பெற வேண்டும்’’ - பிரதமர் மோடி

‘‘மெகா காட்டாட்சியில் இருந்து மேற்கு வங்கம் விடுதலை பெற வேண்டும்’’ - பிரதமர் மோடி
Updated on
2 min read

கொல்கத்தா: மெகா காட்டாட்சியில் இருந்து மேற்கு வங்கம் விடுதலை பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள ராணாகாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று காலை 11 மணி அளவில் அடிக்கல் நாட்டுவதாக இருந்தது. மேலும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கிவைத்து அவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக இன்று காலை 10.40 மணி அளவில் கொல்கத்தா வந்த பிரதமர் மோடி பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராணாகாட்டில் உள்ள தாஹேர்பூர் ஹெலிபேட் தளத்துக்குச் செல்ல இருந்தார். எனினும், அப்பகுதியில் நிலவிய அடர்ந்த மூடுபனியால் ஏற்பட்ட காட்சித் தெளிவின்மை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் கொல்கத்தாவுக்கு திரும்பியது.

பிரதமர் வர இருந்ததால், கூட்டம் நடைபெற இருந்த தாஹேர்பூர் நேதாஜி பூங்காவில் ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். பிரதமர் நேரில் வர முடியாத நிலையில், காணொலி காட்சி வாயிலாக அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: அன்பு, கருணை மற்றும் பக்தியின் உயிருள்ள உருவகமான ஸ்ரீசைதன்ய பிரபு தோன்றிய பூமி நாடியா. வந்தே மாதரம் என்ற அழியாத பாடலின் பூமி மேற்கு வங்கம். அடிமைப்படுத்தப்பட்ட இந்தியாவில் வந்தே மாதரம் மூலம் ஒரு புதிய உணர்வை உருவாக்கிய பக்கிம் சந்திர சாட்டர்ஜி போன்ற ஒரு ஞானியை இந்த நிலம் நாட்டுக்கு வழங்கியது.

கடந்த மாதம் பிஹார் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு மகத்தான ஆணையை வழங்கினர். கங்கை பிஹார் வழியாக மேற்கு வங்காளத்தை அடைகிறது என்று நான் சொன்னேன். எனவே, பிஹார், மேற்கு வங்கத்தின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளது. பிஹார் காட்டாட்சியை ஒருமனதாக நிராகரித்துள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முன்பைவிட அதிக இடங்களை வழங்கியுள்ளது. இப்போது மேற்கு வங்கத்தில் நிலவும் மெகா காட்டாட்சியில் இருந்து நாம் நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும்.

அராஜகம் மற்றும் ஊழல்களால் மூழ்கியிருக்கும் ஒரு அரசாங்கம் மேற்கு வங்கத்தில் உள்ளது. இன்றும்கூட, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் மேற்கு வங்கத்தில் சிக்கித் தவிக்கின்றன. இன்று நான் மனதின் ஆழத்தில் இருந்து ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். திரிணமூல் காங்கிரஸ் கட்சி மோடியை, பாஜகவை எதிர்க்க விரும்பினால் அது அதன் முழு பலத்துடன் எதிர்க்கட்டும். ஆனால், வங்கத்தின் வளர்ச்சியை, இங்குள்ள எங்கள் சகோதர சகோதரிகளின் வளர்ச்சியை இந்த அரசு ஏன் தடுக்க வேண்டும்?

நீங்கள் (டிஎம்சி) மோடியை மீண்டும் மீண்டும் எதிர்க்கலாம். ஆனால், மேற்கு வங்க மக்களை துயரத்தில் ஆழ்த்தாதீர்கள். அவர்களின் உரிமைகளைப் பறிக்கவும், கனவுகளை சிதைக்கவுமான பாவத்தைச் செய்யாதீர்கள். வங்கத்தின் அறிவார்ந்த மக்களிடம் இரட்டை இன்ஜின் பாஜக அரசாங்கத்தை அமைத்து, அது எவ்வளவு விரைவாக வங்கத்தை வளர்க்கப் பாடுபடுகிறது என்பதை பார்க்குமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க டிஎம்சி எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஊடுருவல் பிரச்சினையை பாஜக எழுப்பும்போதெல்லாம், டிஎம்சி எங்களுக்கு எதிராக தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேற்கு வங்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி அசாம் செல்கிறார். குவாஹாட்டி செல்லும் பிரதமர், லோக்ப்ரியா கோபிநாத் பர்தோலோய் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தின் கட்டிடத்தைப் பார்வையிட்டு தொடங்கி வைக்கிறார். பின்னர், அங்கு திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்ற உள்ளார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய முனையக் கட்டிடம் சுமார் 1.4 லட்சம் சதுரமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. இது ஆண்டுக்கு 1.3 கோடி பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘‘மெகா காட்டாட்சியில் இருந்து மேற்கு வங்கம் விடுதலை பெற வேண்டும்’’ - பிரதமர் மோடி
வங்கதேசத்தில் இந்து இளைஞரை அடித்துக் கொன்ற சம்பவத்தில் 7 பேர் கைது: முகம்மது யூனுஸ் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in