

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 10,000 டன் உற்பத்தித் திறன் கொண்ட அலுமினிய வடிவமைப்பு இயந்திரத்தை நிறுவ, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பூமி பூஜை போடுகிறார்.
நாக்பூரில் உள்ள பாதுகாப்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாக்பூரின் அம்பாஜாரியில் அமைந்திருக்கும் அரசுக்கு சொந்தமான யந்த்ரா இந்தியா நிறுவன ஆயுதத் தொழிற்சாலையில் அலுமினிய வடிவமைப்பு இயந்திரத்தை (எக்ஸ்ட்ரூஷன் பிரஸ்) நிறுவுவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை பூமி பூஜை போடுவார்.
இந்த எக்ஸ்ட்ரூஷன் பிரஸ், ராணுவ தளவாட உற்பத்தித் துறைக்கு ஒரு முக்கியமான தேசிய சொத்தாக அமையும். இது பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பெரிய, அதிக வலிமை மற்றும் துல்லியமான அலுமினிய கலவை வடிவங்களை தயாரிப்பதற்கான நாட்டின் திறனை வலுப்படுத்தும்.
இந்தத் திட்டம் முக்கியமான அலுமினிய வடிவப் பாகங்களின் இறக்குமதி மீதான நுகர்வைக் குறைப்பதோடு, சுயசார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் உதவும். இந்நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் ராணுவ தளவாட உற்பத்தித் துறை செயலாளர் சஞ்சீவ் குமார் ஆகியோரும் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அலுமினிய எக்ஸ்ட்ரூஷன் பிரஸ் என்பது சூடாக்கப்பட்ட அலுமினியத்தை, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அச்சு வழியாக அதிக விசை கொடுத்து செலுத்துவதன் மூலம், அலுமினியத்துக்குத் தேவையான வடிவத்தை வழங்கும் ஒரு இயந்திரம் ஆகும்.