

புதுடெல்லி: டெல்லியில் சாலைப் பணிகளை பார்வையிடச் சென்றபோது வீடியோ பதிவுசெய்த இளைஞரை தாக்கிய பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மாவால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு டெல்லியின் திலக்நகர் பகுதியில் அமைக்கப்பட்ட சாலையின் தரப் பரிசோதனையின்போது, ஆளும் பாஜக அரசைச் சேர்ந்த அமைச்சர் பர்வேஷ் வர்மா் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஜர்னைல் சிங் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. புதிதாக போடப்பட்ட சாலையின் தரம் குறைவாக இருப்பதாகக் கூறிய ஜர்னைல் சிங், சாலையின் மேல்பகுதியைத் தனது கைகளாலேயே பெயர்த்தெடுத்து அமைச்சரிடம் காண்பித்தார்.
இதனை, அவரின் உதவியாளர் சாகிப் சிங், தனது மொபைல் போனில் நேரலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஆத்திரமடைந்த அமைச்சர் பர்வேஷ் வர்மா, தனது இடது கையால் அந்த மொபைல் போனை கீழே தள்ளிவிட்டு, வலது கையால் சாகிப் சிங்கின் முகத்தில் அறைந்தார்.
உடனடியாக பாதுகாப்புப் பணியிலிருந்த பாதுகாவலர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கிவிட்டனர். டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவா்ல் இந்த வீடியோவைப் பகிர்ந்து, அமைச்சர் பர்வேஷ் வர்மாவை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் பரவேஷ் வர்மா, ‘‘ஜர்னைல் சிங்கின் உதவியாளர் எனது குடும்பத்தினரை கெட்ட வார்த்தைகளால் திட்டியதால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே நான் அப்படிச் செய்ய நேரிட்டது என்று தெரிவித்துள்ளார்.