

புதுடெல்லி: மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் போர்களுக்கு விரைவில் முடிவு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மோதல்கள் மூலம் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது என்பதை பின்லாந்து அதிபர் உடனான சந்திப்பின்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு நான்கு நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்புடன், பிரதமர் மோடி நேற்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் கூறியதாவது: இந்தியாவும் பின்லாந்தும் சட்டத்தின் ஆட்சி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிமுறைகளில் நம்பிக்கை கொண்டுள்ளன. ராணுவ மோதல்கள் மூலமாக மட்டுமே எந்தவொரு சிக்கலுக்கும் தீர்வு கண்டுவிட முடியாது என்பதில் இரு நாடுகளும் ஒரு மித்த கருத்தைக் கொண்டுள்ளன.
உக்ரைன் விவகாரமாக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி, போர்களை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். இரு நாடுகளுக்கும் இடையிலான டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிலைத் தன்மை தொடர்பான உறவுகளில் இருவரும் இணைந்து செயல்படுவது என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு முதல் 6 ஜி தொலைத்தொடர்பு வரை, தூய்மையான எரிசக்தி முதல் குவாண்டம் கம்ப்யூட்டிங் வரை, இந்தத் கூட்டாண்மை இரு நாடுகளிடையே புதிய வேகத்தையும் ஆற்றலையும் வழங்கும்.
மேலும், இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவிற்கும் பின்லாந்திற்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில் நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.