“100 நாளுக்கு பதில் 125 நாள் வேலை என்பது ஏமாற்றும் தந்திரம்” - பிரியங்கா காந்தி

“100 நாளுக்கு பதில் 125 நாள் வேலை என்பது ஏமாற்றும் தந்திரம்” - பிரியங்கா காந்தி
Updated on
2 min read

புதுடெல்லி: கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதத்தை வழங்கும் திட்டம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா ஏழைகளுக்கு எதிரானது என குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் பெயரை, ‘விக்சித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி-ஜி ராம்-ஜி)’ என பெயர் மாற்றி, பல்வேறு மாற்றங்களை செய்ய வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “இந்த மசோதாவுக்கு எதிராக நாங்கள் போராடுவோம். இந்த மசோதா காரணமாக, எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும். இந்த மசோதாவில் 100 என்பதற்குப் பதில் 125 நாள் வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றும் தந்திரம். இது தெளிவாக தெரிகிறது.

இந்த திட்டத்துக்கான நிதிச் சுமையை மாநிலங்கள் மீது சுமத்தும் அந்தக் கணத்தில் இருந்தே இந்த திட்டம் படிப்படியாக முடிவுக்கு வந்துவிடும். இவ்வளவு பெரிய நிதிச் சுமையை மாநிலங்கள் மீது சுமத்துவதில் இருந்தே இது நன்றாக தெரிகிறது. இந்த மசோதா ஏழைகளுக்கு எதிரானது” என தெரிவித்தார்.

முன்னதாக, இந்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் பேசிய பேசிய மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “காந்தி எங்கள் இலட்சியம், எங்கள் உத்வேகம். மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் பாரதிய ஜனதா கட்சி காந்திஜியின் சமூக மற்றும் பொருளாதாரத் தத்துவத்தை தனது பஞ்ச நிச்சயத்தில் இணைத்துள்ளது.

எதிர்க்கட்சிகள் காந்தியின் கொள்கைகளைக் கொலை செய்கின்றன. நேற்று சபையில், இரவு 1:30 மணி வரை மரியாதைக்குரிய உறுப்பினர்களின் பேச்சைக் கேட்டேன். நீங்கள் உங்கள் கருத்துகளையே பேசுகிறீர்கள், எங்கள் வார்த்தைகளைக் கேட்பதில்லை; இதுவும் ஒரு வன்முறைதான்.

விக்சித் பாரத் 2047 என்ற தேசிய தொலைநோக்கு லட்சியத்துக்கு இணங்க, ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்துக்கும் ஒரு நிதியாண்டிற்கு 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்புக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. இது கிராமப்புற வாழ்வாதாரங்களை வலுப்படுத்துவதிலும், ஒட்டுமொத்த கிராமப்புற வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது” என தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதற்கு மத்தியில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மக்களவை நடவடிக்கைகள் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நேற்று இந்த மசோதா மீது மக்களவையில் கிட்டத்தட்ட 14 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்த மசோதாவை 2047-க்குள் விக்சித் பாரத்தை அடைவதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கை என்று கூறி ஆதரித்தபோதிலும், இந்தச் சட்டத்தை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எனினும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது.

“100 நாளுக்கு பதில் 125 நாள் வேலை என்பது ஏமாற்றும் தந்திரம்” - பிரியங்கா காந்தி
100 நாள் வேலைத் திட்டம் பெயரில் மட்டும்தான் பிரச்சினையா? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in