

திருப்பதி: மொரீஷியஸ் அதிபர் தரம்பீர் கோகுல் தனது குடும்பத்தினருடன் 2 நாள் பயணமாக திருப்பதி வந்தார். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், காளஹஸ்தி சிவன் கோயிலில் வழிபட்ட அவர், செவ்வாய்க்கிழமை இரவு திருமலைக்கு வந்தார்.
திருமலையில் இரவு தங்கிய தரம்பீர் கோகுல் நேற்று காலை தனது குடும்பத்தாருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் சுவாமி படம் மற்றும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி அதிகாரிகள் கவுரவித்தனர். முன்னதாக திருமலையில் வராஹ சுவாமியை அவர் தரிசனம் செய்தார்.
கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் தரம்பீர் கோகுல் கூறுகையில், “திருமலை தர்மகிரி பகுதியில் உள்ள வேத பாட சாலையை பார்வையிட்டேன். அங்குள்ள கலாச்சாரம், சனாதன தர்மம், நவீன தொழில் நுட்பம் போன்றவை என்னை மிகவும் கவர்ந்தன.
மொரீஷியஸில் உள்ள ஹரிஹரா கோயிலில் இதேபோன்று வேத பாட சாலை அமைக்கப்படும். ஆந்திராவின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் என்னை பிரம்மிக்கச் செய்கிறது" என்றார்.