

பஸ்தர்: சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில், நடைபெறும் 3 நாள் பழங்குடியினர் கலாச்சார விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இயற்கை எழில் மற்றும் வளமான கலாச்சாரத்துடன் கூடிய பஸ்தர் பகுதி, மக்களை எப்போதும் கவர்கிறது. ஆனால், இப்பகுதி பல ஆண்டு காலமாக மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தலில் சிக்கியிருந்தது. இதனால் இங்குள்ள இளைஞர்கள், பழங்குடியினருக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது மாவோயிஸ்ட்கள் வன்முறையை கைவிட்டு அமைதிப் பாதைக்கு திரும்பி வருகின்றனர். மாவோயிஸ்ட்களுக்கு எதிராக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்ததால், இங்கு அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துள்ளது.
மாவோயிஸ்ட்கள் அதிக எண்ணிக்கையில் சரணடைந்துள்ளனர். அமைதி வழிக்கு திரும்பும் மாவோயிஸ்ட்களுக்கு கவுரவமான வாழ்க்கையை மத்திய அரசு உறுதி செய்கிறது. மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகள், மக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றால் பஸ்தரில் வளர்ச்சிக்கான புதிய விடியல் உதயமாகியுள்ளது. இவ்வாறு முர்மு கூறினார்.