ஜக்தால்பூர்: மாவோயிசம் ஒருபோதும் சமூகத்துக்கு பயன் அளித்தது கிடையாது என்றும், அது அழிவையே பரப்பியது என்றும் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டில் இருந்து மாவோயிச அச்சுறுத்தல் அகற்றப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
சத்தீஸ்கரில் ஏழு மாவட்டங்களைக் கொண்ட பஸ்தர் பகுதியில் உள்ள ஜக்தால்பூர் நகரில் நடைபெற்ற ‘பஸ்தர் பண்டும் 2026’ எனும் கலாச்சார நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அமித் ஷா, ‘‘மாவோயிசம் எந்தவொரு சமூகத்துக்கும் ஒருபோதும் பயனளித்தது இல்லை. அது இருந்த இடங்களில் எல்லாம் அழிவையே பரப்பியது. கொலம்பியா, பெரு, கம்போடியா போன்ற நாடுகள் இதற்கு உதாரணங்கள்.
ஏற்கெனவே அறிவித்தபடி மார்ச் 31-ம் தேதிக்குள் மாவோயிச அச்சுறுத்தலில் இருந்து நாடு முழுமையாக விடுவிக்கப்படும். மாவோயிச அச்சுறுத்தல் முழுமையாக வேரறுக்கப்படும். மாவோயிஸ்டுகள் சரணடைந்து பொது நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு கண்ணியமான மறுவாழ்வு அளிக்கப்படும். இந்த விவகாரத்தில், சத்தீஸ்கர் அரசாங்கத்தின் மாவோயிச மறுவாழ்வு கொள்கை மிகவும் முக்கியமானது.
மீதமுள்ள மாவோயிஸ்டுகளில் இளம் பழங்குடிப் பெண்களும் இருப்பது கவலை அளிக்கிறது. அவர்கள் தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சரணடைய வேண்டும். சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. அதேநேரத்தில், துப்பாக்கிச் சூடு நடத்துபவர்கள், கண்ணிவெடிகளை புதைப்பவர்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளைக் கொளுத்துபவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள். ஆயுத வன்முறைககு உறுதியான பதில் அளிக்கப்படும். ஆயுதங்களை ஏந்தினால் பதிலடியும் ஆயுதங்களால்தான் இருக்கும்.
நாங்கள் (அரசு) யாருடனும் சண்டையிட விரும்பவில்லை. எங்கள் பழங்குடி சகோதர, சகோதரிகளை காப்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம். கண்ணிவெடிகள் புதைக்கப்படும்போது அப்பாவி குழந்தைகளும் கொல்லப்படலாம் அல்லது நிரந்தரமாக உடல் உறுப்புகளை இழக்கலாம். இப்படி ஒரு கொடூர எண்ணம் எங்கிருந்து வருகிறது?
மாவோயிஸ்டுகள் பல பத்தாண்டுகளாக பள்ளிகளை மூடி, பல தலைமுறையினருக்கு கல்வி மறுத்து, பெருமளவில் எழுத்தறிவின்மை உருவாக்கி உள்ளனர். ஆனால், பஸ்தர் இப்போது விரைவான வளர்ச்சிப் பாதையில் உள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. சாலைகள் அமைக்கப்படுகின்றன. மொபைல் கோபுரங்கள் நிறுவப்படுகின்றன. மின்சாரமும் குடிநீரும் கிராமங்ளுக்கு விரிவுபடுத்தப்படுகின்றன.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் பஸதர், நாட்டின் மிகவும் வளர்ந்த பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக மாறும் என்பதே எங்கள் உறுதிப்பாடு. பஸ்தரின் உண்மையான அடையாளம் துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அல்ல. மாறாக, கலாச்சாரமும் பாரம்பரியமுமே அதன் உண்மையான அடையாளம்” என தெரிவித்தார்.
மேலும், “பஸ்தர் பண்டும் 2026 நிகழ்வின் 12 பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் வெற்றியாளர்கள் தங்கள் கலையை வெளிப்படுத்தவும், விருந்தில் பங்கேற்கவும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைக்கப்படுவார்கள்’’ என தெரிவித்தார்.