ஷரியா சட்டத்தை முன்னிறுத்தி ரூ.6,000 கோடி மோசடி செய்தவர் கைது

ஷரியா சட்டத்தை முன்னிறுத்தி ரூ.6,000 கோடி மோசடி செய்தவர் கைது
Updated on
1 min read

குருகிராம்: ஷரியா சட்​டத்தை முன்​னிறுத்தி ரூ.6,000 கோடி மோசடி செய்த ஹைத​ரா​பாத் பெண் கைது செய்​யப்​பட்டு உள்ளார்.

தெலங்​கானா தலைநகர் ஹைத​ரா​பாத்தை சேர்ந்​தவர் ஆலிமா நவ்ஹேரா ஷேக் (52). இவர் ஹீரா குழும நிறுவனத்​தின் தலைவராக செயல்​பட்​டார். இந்த நிறு​வனம் தங்க நகை வியாபாரம், ஜவுளி, கிரானைட், சுற்​றுலா, ரியல் எஸ்​டேட், இணைய வர்த்​தகத்​தில் ஈடு​பட்டு வரு​வ​தாக ஆலிமா விளம்​பரம் செய்​தார்.

மேலும் முஸ்​லிம்​களின் ஷரியா சட்​டத்​தின்​படி வட்டி பெறு​வது குற்​றம் ஆகும். ஆனால் தங்​கள் நிறு​வனத்​தில் முதலீடு செய்​தால் வட்டி கொடுக்க மாட்​டோம். அதற்கு பதிலாக ஆண்டுக்கு 36% ஈவுத் தொகையை வழங்​கு​வோம் என்று ஆலிமா கூறி​னார்.

அவரது விளம்பர உத்​தி​யில் மயங்​கிய சுமார் 1.75 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட முதலீட்​டாளர்​கள் ரூ.6,000 கோடிக்​கும் அதி​க​மாக ஹீரா குழும நிறு​வனத்​தில் முதலீடு செய்​தனர். ஆனால் வாக்​குறுதி அளித்​த​படி முதலீட்​டாளர்​களுக்கு ஈவுத் தொகை வழங்கப்படவில்லை. முதலீட்​டாளர்​கள் வழங்​கிய தொகையை தனது சொந்த கணக்​கு​களுக்கு மாற்​றிய ஆலி​மா, ஹைத​ரா​பாத் உட்பட பல்​வேறு இடங்​களில் சொத்​துகளை வாங்கி குவித்​தார்.

ஆலி​மா​வால் ஏமாற்​றப்​பட்ட முதலீட்​டாளர்​கள் ஹைத​ரா​பாத் உட்பட நாடு முழு​வதும் பல்​வேறு போலீஸ் நிலை​யங்​களில் புகார் அளித்​தனர். இதுதொடர்​பாக அமலாக்​கத் துறை தனி​யாக வழக்குப் பதிவு செய்து விசா​ரணை நடத்​தி​யது. இதன்​பேரில் அவரது சொத்​துகள் முடக்​கப்​பட்​டன.பல்​வேறு வழக்​கு​களில் அவர் ஜாமீன் பெற்​றார். தெலங்​கா​னா​வின் வாரங்​கல் போலீஸ் நிலையத்​தில் கடந்த 2021-ம் ஆண்டு ஆலிமா மீது தங்க முதலீடு மோசடி தொடர்​பான வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.

இதை விசா​ரித்த வாரங்​கல் நீதி​மன்​றம், ஆலி​மாவை கைது செய்ய வாரன்ட் பிறப்​பித்​தது. ஆனால் அவர் தலைமறை​வானார். மற்​றொரு வழக்​கில் ஹைத​ரா​பாத் சிறப்பு நீதி​மன்​ற​மும் ஆலிமாவை கைது செய்ய வாரன்ட் பிறப்​பித்​தது. நீதி​மன்​றங்​கள் பிறப்​பித்த கைது வாரன்​டு​களை ரத்து செய்​யக் கோரி உச்ச நீதிமன்​றத்​தில் ஆலிமா மேல்​முறை​யீடு செய்​தார்.

ஆனால் அவரது மனுவை உச்ச நீதி​மன்​றம் நிராகரித்​து​விட்​டது. இந்த சூழலில் ஹரி​யா​னா​வில் அவர் பதுங்கி இருப்​ப​தாக அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதைத் தொடர்ந்து தெலங்​கா​னா, ஹரி​யானா போலீ​ஸாருடன் இணைந்து அமலாக்கத் துறை அதி​காரி​கள் ஆலிமாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஷரியா சட்டத்தை முன்னிறுத்தி ரூ.6,000 கோடி மோசடி செய்தவர் கைது
நல்வழியாளர் பாதுகாப்புச் சட்டம் தெரியுமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in