

டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் 65 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர் மம்முட்டிக்கு (வலது ஓரம்) பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ஆகியோர் பத்ம விருதினை பெற்றுக் கொண்டனர். படங்கள் பிடிஐ
புதுடெல்லி: நடிகர்கள் மம்முட்டி, மாதவன், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்ட 65 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று பத்ம விருதுகளை வழங்கினார்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், மத்திய அரசுப் பணி, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இதன்படி நடப்பு 2026-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக 131 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் 66 பேருக்கு கடந்த மே 26-ம் தேதி பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த விழாவில் 65 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 பேருக்கு பத்ம விபூஷண், 7 பேருக்கு பத்ம பூஷண், 56 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார்.
கேரளாவின் ஜென்மபூமி நாளிதழ் இணை நிறுவனரும் பிரபல எழுத்தாளருமான பி. நாராயணன், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் (கேரளா) ஆகியோர் பத்ம விபூஷண் விருதினை பெற்றுக் கொண்டனர். தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், தமிழகத்தின் ஈரோட்டை சேர்ந்த எஸ்.கே.எம். குழும நிறுவனர் மயிலானந்தன், மலையாள நடிகர் மம்முட்டி, கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் வெள்ளப்பள்ளி நடேசன், ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட பிரபல அமெரிக்க மருத்துவர் தத்தாத்ரேயுடு நோரி, மறைந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன், பாலிவுட் பின்னணி பாடகி அல்கா யாக்னிக் ஆகியோர் பத்ம பூஷண் விருதினை பெற்றுக் கொண்டனர்.
அசாமை சேர்ந்த சிற்பி நூருதீன் அகமது, தமிழகத்தைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் திருவாரூர் பக்தவத்சலம், தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த வெண்கல சிற்ப கலைஞர் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், விஞ்ஞானி தங்கராஜ், ஹைதராபாத்தை சேர்ந்த பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி பாலசுப்பிரமணியன், ஆகாஷ் ஏவுகணை திட்ட முன்னாள் இயக்குநர் சந்திரமவுலி கடமானுகு (தெலங்கானா), கர்நாடகாவை சேர்ந்த விண்வெளி பொறியாளர் சுபா வெங்கடேச ஐயங்கார், கர்நாடகாவை சேர்ந்த மறைந்த தொழிலதிபர் ஜெகநாதன், பஞ்சாபை சேர்ந்த ஆன்மிக தலைவர் நிரஞ்சன் தாஸ், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, உத்தர பிரதேசத்தை சேர்ந்த எழுத்தாளர் மங்கள கபூர், மகாராஷ்டிர தொழிலதிபர் அசோக் காடே, ரஷ்ய எழுத்தாளர் லியுட்மிலா கோக்லோவா, கர்நாடகாவை சேர்ந்த கல்வியாளர் பிரபாகர் பசவபிரபு கோரே, அசாம் நாட்டுப்புற பாடகி பொக்கிலா லெக்தேபி, தெலங்கானாவை சேர்ந்த மறைந்த ராம ரெட்டி, மத்திய உள்துறை முன்னாள் துணைச் செயலாளர் ஆர்விஎஸ். மணி, கேரளாவை சேர்ந்த மோகினியாட்ட கலைஞர் கலாமண்டலம் விமலா மேனன், ஜார்ஜியாவை சேர்ந்த மறைந்த மல்யுத்த வீரர் விளாடிமிர் மெஸ்ட்விரிஷ்விலி, தமிழகத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி நடேசன், தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், ஹாக்கி வீராங்கனை சவீதா புனியா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.ராமசாமி, நடிகர் மாதவன், தமிழகத்தை சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் ரஞ்சனி, காயத்ரி, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த பொறியாளர் பிரேம் லால் கவுதம், மேற்குவங்கத்தை சேர்ந்த எழுத்தாளர் அசோக் குமார் ஹால்தர், கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் ஹனகாவடி, மேற்குவங்கத்தை சேர்ந்த இசைக் கலைஞர்கள் தருண் பட்டாச்சார்யா, ஜோதிஷ் தேவ்நாத் உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருதினை பெற்றுக் கொண்டனர்.