

புவனேஸ்வர்: பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா புவனேஸ்வரில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
மேற்குவங்கம் பங்குரா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா, கொல்கத்தாவில் உள்ள ஓட்டலில் மத்திய அமைச்சர் அமித் ஷா பதுங்கியிருந்ததாகவும், அவர்கள் நினைத்திருந்தால், அமித் ஷாவால் ஓட்டலை விட்டு வெளியே வந்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
இது மத்திய உள்துறை அமைச்சருக்கு விடும் மிரட்டல் அல்ல. ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் விடுக்கும் மிரட்டல். மேற்கு வங்கத்தில் முந்தைய தேர்தல்களின் போது பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சென்ற வாகனம் ஊடுருவல்காரர்களால் தாக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் குண்டர்களால் 300 பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டனர். இங்கு ஹிட்லர் ஆட்சி நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் பாஜக 3-ல் 2 மடங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.