

புதுடெல்லி: மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் தனது இல்லத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் கொல்கத்தா மாநகராட்சியின் டிஎம்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் கொல்கத்தா மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் தயார் நிலையை ஆய்வு செய்ய மம்தா இந்தக் கூட்டத்தை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், சாலைகளில் தொழுகை நடத்த முஸ்லிம்களுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது மேட்டியாபுரூஜ் பகுதி டிஎம்சி கவுன்சிலரை, இப்பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தை அணுகுமாறு மம்தா அறிவுறுத்தியுள்ளார். எனவே அந்த கவுன்சிலர் இந்த விவகாரம் குறித்து விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், முதல்வர் சுவேந்து அதிகாரி அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை கொல்கத்தாவின் ராஜாபஜார், தபாசியா, பார்க் சர்க்கஸ், தில்ஜலா ஆகிய பகுதிகளில் சாலைகளை மறித்து தொழுகை நடத்தப்படவில்லை.
மசூதிகளில் இரண்டு கட்டங்களாக இருவேறு நேரங்களில் தொழுகைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் முஸ்லிம்கள் மசூதிகளுக்கு உள்ளேயே தங்கள் தொழுகையை முடித்துக்கொண்டனர்.
கொல்கத்தா மாநகராட்சியில் மொத்தம் 144 வார்டுகள் உள்ளன. மாமன்றத்தில் டிஎம்சி சார்பில் 136 கவுன்சிலர்கள் உள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிடம் டிஎம்சி படுதோல்வியை சந்தித்தது.
இச்சூழலில், வரும் மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு, கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சியூட்ட அக்கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மம்தா முதல்வராக இருந்தபோது பக்ரீத் பண்டிகைக்கு 2 நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு நாளாக மாற்றப்பட்டுள்ளது. வரும் மே 28-ல் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.