

கொல்கத்தா: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், ”சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த நாளில் எனது பணிவான வணக்கம் செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் ராமகிருஷ்ண பரமஹம்சர் பெயர் முன் சுவாமி என சேர்த்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ராம கிருஷ்ணரின் மறைவுக்குப் பின் ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ணா இயக்கத்தை நடத்தும் சீடர்கள் தான் இந்திய பாரம்பரியப்படி ‘சுவாமி’ என அழைக்கப்பட்டனர்.
இவர்களின் குருவான ராமகிருஷ்ணர் ‘தாகூர்’ என்றுதான் கூறப்படுகிறார். தாகூர் - மா- ஸ்வாமிஜி என்பதுதான் இங்கு பின்பற்றப்படும் ஒழுங்கு முறை. தாகூர் என்றால் ராமகிருஷ்ண பரமஹம்சர். மா என்றால் அது மாதா சாரதா. சுவாமிஜி என்றால் அது சுவாமி விவேகானந்தர்.
வங்காளத்தின் மாபெரும் மகான்கள் குறித்து தனது கலாச்சார உணர்வற்ற தன்மையை பிரதமர் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். எனவே, இனி இதுபோன்று கூற வேண்டாம் என பிரதமரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.