

கொல்கத்தாவிலுள்ள ரைட்டர் பில்டிங்கில் முதல்வர் அலுவலகம் செயல்படும் அறைக்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி. (கோப்புப் படம்)
கொல்கத்தா: மேற்கு வங்க தலைமை செயலகத்தில் கால் வைக்க மாட்டேன் என்று 1993-ல் போட்ட சபதத்தை 2011-ல் முதல்வராக நிறைவேற்றினார் முதல்வர் மம்தா பானர்ஜி.
கடந்த 1993-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்தார் மம்தா பானர்ஜி. மக்களவை எம்.பி.யான அவர் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார். செல்லும் இடங்களிலும் அவரது பேச்சுக்கு வரவேற்பு இருந்தது. கட்சியின் ஃபயர் பிராண்ட் லீடராக அவர் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் 1993ம் ஆண்டு மே மாதம் மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்த தீபாலி பசக் என்ற மாற்றுத் திறனாளி (வாய் பேச முடியாத, காது கேளாதவர்) பெண்ணை, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் வன்கொடுமை செய்துவிட்டார். இதனால் தீபாலி பசக் கர்ப்பமானார். இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தும் பதிவு செய்யப்படவில்லை. அப்போது ஜோதிபாசு தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது.
இந்த சம்பவம் அறிந்ததும் கொதித்தெழுந்த மம்தா, முதல்வர் ஜோதிபாசுவிடம் இந்த விஷயத்தை எடுத்துச் சொல்ல முயன்றார். மே 6ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அவருக்கு முதல்வரைச் சந்திக்க அனுமதி தரப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஜோதி பாசுவின் அறைக்கு 3 மணிக்கு மம்தா சென்றார்.
அப்போது முதல்வர் ஜோதிபாசு, வேறு யாருடனோ ஆலோசனையில் இருப்பதாகவும், அவரைச் சந்திக்க முடியாது என்றும் மம்தாவிடம் ஜோதிபாசுவின் உதவியாளர்களால் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் மம்தாவைச் சந்திக்காமலேயே அங்கிருந்து ஜோதிபாசு புறப்பட்டுச் சென்றுவிட்டார். இது மம்தாவுக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது. ஏழை பெண்ணுக்கு நீதி கேட்க வந்தபோது முதல்வர் இப்படிச் செய்தது அவருக்குள் இருந்த உணர்வைத் தூண்டிவிட்டது.
இதுகுறித்து அப்போதைய போலீஸ் துணை கமிஷனரும், தற்போதைய திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவருமான அபானி மோகன் ஜோர்டர் கூறியதாவது: முதல்வர் ஜோதிபாசு புறப்பட்டுச் சென்றதும், முதல்வர் அலுவலகம் இருக்கும் ரைட்டர்ஸ் பில்டிங்கில் மம்தா கோபமாக அமர்ந்திருந்தார். அதேநேரத்தில் இந்த சம்பவத்தை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று அவர் முடிவு செய்தார்.
இதையடுத்து முதல்வர் ஜோதிபாசு அலுவலகம் இருக்கும் பகுதியிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து 3 மணி நேரம் அங்கேயே இருந்தார். முதல்வரைச் சந்திக்காமல் இங்கிருந்து செல்லமாட்டேன் என்றார். இதையடுத்து பெண் போலீஸார் விரைந்து வந்து அவரை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று போலீஸ் வேனில் ஏற்றினர். மம்தாவுடன் இருந்த கர்ப்பிணிப் பெண் தீபாலி, போலீஸார் நடத்திய தடியடியில் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மம்தா பானர்ஜி, லால் பஜாரிலுள்ள போலீஸ் கட்டிடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டார். அவர் மத்திய அமைச்சராக இருந்தபோதிலும் அவரை போலீஸார் சிறையில் தள்ளினர். முதலில் சிறையிலிருந்து வர மறுத்த மம்தா, நான் பேசியதற்குப் பின்னர் வெளியே வரச் சம்மதித்தார்.
வெளியே வந்தபோது இளைஞர் காங்கிரஸார், போலீஸாரைத் தாக்க முற்பட்டனர். ஆனால் மம்தா அவர்களைத் தடுத்துவிட்டார். பின்னர் தன்னை போலீஸ் வேனிலேயே வீட்டில் விட்டுவிடுவதற்கும் ஒப்புக் கொண்டார். செல்லும் வழியில் மாயோ சாலை கிராசிங்கில் உள்ள காந்தி சிலை அருகே சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.
இந்த சம்பவத்தால்தான், தலைமைச் செயலகத்தில் நான் கால் வைக்க மாட்டேன் என்று மம்தா சபதம் பூண்டார். அந்த சபதத்தை சுமார் 18 ஆண்டுகள் வரை அவர் காப்பாற்றினார். 2011ம் ஆண்டு மே 20ல் முதல்வராக பதவியேற்ற பின்னர் தான் அவர் தலைமைச் செயலகம் நுழைந்தார். மேலும், மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையையும் பெற்றார். இவ்வாறு அபானி மோகன் தெரிவித்தார்.