

மம்தா பானர்ஜி
நாடியா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியின்போது சுமார் 91 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணைய புள்ளிவிவரம் கூறுகிறது.
நாடியா மாவட்டத்தில் உள்ள சக்தஹா நகரில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: எஸ்ஐஆர் பணிகளின்போது வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டவர்களின் பெயரை மீண்டும் சேர்க்க திரிணமூல் காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதன் பிறகு பெருமளவிலான பெயர்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக பரிசீலனையில் இருந்த சுமார் 60 லட்சம் பெயர்களில் சுமார் 32 லட்சம் பெயர்கள் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த நீக்கங்கள் தற்செயலானவை அல்ல, மாறாக ஒரு குறிப்பிட்ட குழுவினரை குறிவைத்து நடத்தப்படுபவை. இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.