

புதுடெல்லி: மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா உட்பட 37 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் வகையில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நேற்று மாநிலங்களவையில் பேசினர்.
தேவகவுடா குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ”தேவகவுடாவை எனக்கு 54 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். அவருடன் நான் நீண்ட காலம் இணைந்து பணியாற்றியுள்ளேன். பிறகு, அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.... ”அவர் நேசித்தது எங்களை, ஆனால் திருமணம் செய்தது மோடியை” என கிண்டலாக குறிப்பிட்டார்.
கார்கேவின் பேச்சை கேட்டு பிரதமர் மோடி மற்றும் எம்.பி.க்கள் சிரித்தனர். அரசியலில் ஈடுபடுபவர்கள் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் இருப்பதால், அவர்களுக்கு ஓய்வே இல்லை எனவும் கார்கே கூறினார்.
பிரதமர் மோடி பேசுகையில், ”சமீபகாலமாக அவையில் நகைச்சுவை, கிண்டல் எல்லாம் குறைந்து விட்டது. அவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.க்கள், தேவகவுடா, கார்கே மற்றும் சரத் பவார் போன்ற மூத்த உறுப்பினர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.