

புதுடெல்லி: வடக்கு கோவாவின் அர்போராவில் இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட துயரகரமான தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். தவிர்க்கப்படக்கூடிய இந்த துயர சம்பவம் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்த துயர சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து தீ பாதுகாப்பு விதிகளும் அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்.
இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கோவாவின் அர்போராவில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான தீ விபத்து குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகள்.
இது ஒரு விபத்து மட்டுமல்ல, இது ஒரு அரசாங்க தோல்வியும்கூட. வெளிப்படையான விசாரணை மூலம் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கோவாவின் அர்போராவில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நினைத்துப் பார்க்க முடியாத ஒரு இழப்பு இது. இந்த விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.