“மகளிர் இடஒதுக்கீட்டை இப்போதே அமல்படுத்தலாம். ஆனால்...” - பிரதமர் மோடி மீது கார்கே குற்றச்சாட்டு

“மகளிர் இடஒதுக்கீட்டை இப்போதே அமல்படுத்தலாம். ஆனால்...” - பிரதமர் மோடி மீது கார்கே குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

கலபுரகி: மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார். தொகுதி மறுவரையறைக்காக காத்திருக்காமலேயே 33 சதவீத இடஒதுக்கீட்டை அரசாங்கத்தால் அமல்படுத்த முடியும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் கலபுரகி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “மகளிர் இடஒதுக்கீட்டை மத்திய அரசால் இப்போதே அமல்படுத்த முடியும். நாடாளுமன்றத்தின் தற்போதைய பலம் மற்றும் தற்போதைய தொகுதி அமைப்பின் அடிப்படையில் அந்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்கலாம். ஆனால், பிரதமர் மோடியை தடுப்பது எது?

எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்தும் நோக்கில் இந்த விவகாரத்தை அரசாங்கம் அரசியலாக்குகிறது. மற்றவர்களை அவதூறு செய்யவும், எதிர்க்கட்சிகளை களங்கப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் ஒரு தந்திரம் மட்டுமே இது.

இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முன்பே முயன்றவர்கள் நாங்கள். அவ்வாறு இருக்க நாங்கள் ஏன் எதிர்க்கப் போகிறோம். இது பிரதமர் மோடியின் மற்றொரு தந்திரம். பொய்களைக் கூறி பொதுமக்களை ஏமாற்றி, தனது திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அவர் முயல்கிறார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான எந்தவொரு அரசியலமைப்பு திருத்த மசோதாவையும் கொண்டுவருவதற்கு முன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்ட வேண்டும் என்று நான் ஏப்ரல் 11, 2026-ல் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தேன். ஆனால், எனது கோரிக்கையை பிரதமர் ஏற்கவில்லை. பிறகு, ஏப்ரல் 14-ம் தேதி அந்த மசோதா பொதுவெளியில் வெளியிடப்பட்டது. ஏப்ரல் 17-ல் அந்த மசோதா மக்களவையில் தோல்வி அடைந்தது.

அதன்பிறகு ஜூலை 16-ம் தேதியும், ஆகஸ்ட் 27-ம் தேதியும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதினேன். இப்போது நான்காவது முறையாக மீண்டும் அதே கோரிக்கையை நான் முன்வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

“மகளிர் இடஒதுக்கீட்டை இப்போதே அமல்படுத்தலாம். ஆனால்...” - பிரதமர் மோடி மீது கார்கே குற்றச்சாட்டு
“அவர்கள் நிபுணர்களா?” - இந்திய அரசு குறித்த அறிக்கைக்கு அமெரிக்க அமைச்சர் ரூபியோ எதிர்வினை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in