

மகேஷ் தீக்ஷித்
புதுடெல்லி: மத்திய உளவுப் பிரிவு (ஐபி) புதிய தலைவராக 1993ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய உளவுப் பிரிவு தலைவர் தபன் தேகாவின் பதவி நீட்டிப்பு இம்மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து உளவுப் பிரிவின் புதிய தலைவராக மகேஷ் தீக்ஷித்தை பிரதமர் மோடி தலைமையிலான நியமனக் குழு நியமித்துள்ளது. இவர் 2 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.
1993ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ் தீக்ஷித் தனது பணிக் காலத்தில் பெரும்பாலும் உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இருந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் 370-வது சிறப்பு சட்டப் பிரிவை நீக்கிய பிறகு, அங்கு இவர் உளவுப் பிரிவு தலைவராக முக்கிய பங்காற்றினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இவர் உளவுப் பிரிவு தலைவராக பணியாற்றி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்களை அழித்ததில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.