

ராய்காட்: மகாராஷ்டிராவின் ராய்காட் பகுதியில் வெள்ளத்தில் எரிவாயு சிலிண்டர்கள் மிதந்து வந்த வீடியோ மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவற்றை வீடுகளுக்கு எடுத்துச்சென்று பயன்படுத்த வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஹெச்பிசிஎல் பாதாளகங்கா எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் ஆலையின் பாதுகாப்புச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், வெள்ள நீர் நேரடியாக ஆலைக்குள் புகுந்தது.
இதன் விளைவாக, ஆலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 எரிவாயு சிலிண்டர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு, பாதாளகங்கா ஆறு மற்றும் கர்பாடா ஓடையில் தத்தளித்தபடி மிதக்கத் தொடங்கின. இந்த விநோதமான காட்சியை பாலத்தின் மீது நின்றபடி பொதுமக்கள் பலரும் தங்களது மொபைல் போன்களில் ஆச்சரியத்துடன் வீடியோவாகப் பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டதால், பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகமானது.
இதையடுத்து, ராய்காட் மாவட்ட ஆட்சியர் கிஷன் ஜாவ்லே கூறுகையில், ”ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இந்த சிலிண்டர்கள் சிலவற்றில் எரிவாயு நிரப்பப்பட்டிருக்கலாம். பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, பொதுமக்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம். மீட்கப்படும் எரிவாயு சிலிண்டர்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ அல்லது நிறுவனத்திடமோ ஒப்படைக்க வேண்டும்.
இந்த சிலிண்டர்களை நேரடியாக ஹெச்பிசிஎல் நிறுவன வளாகம், அருகில் உள்ள ஹெச்பிசிஎல் விநியோகஸ்தர், கிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகம், பிற வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்” என்றார்.