

ராகுல் காந்தி | கோப்புப் படம்
புதுடெல்லி: இந்தியாவின் மூன்றாவது காலாண்டு வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட வலுவாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டி உள்ள நிலையில், இந்திய பொருளாதாரத்தை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தியை ‘எதிர்மறை சிந்தனையின் தலைவர்’ என்று பாஜக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘தீய எண்ணத்துடன் பொய் சொல்லி நமது இந்திய பொருளாதாரத்தைப் பற்றி அவதூறு பரப்பிய ‘எதிர்மறை சிந்தனையின் தலைவர் (Leader Of Pessimism) ராகுல் காந்தி, இப்போது நமது தேசத்திடமும் மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பாரா?
இந்தியப் பொருளாதாரத்தை சர்வதேச நாணய நிதியம் பாராட்டி உள்ளது. இது, நமது தேசத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் சீர்குலைக்கு முயன்ற ராகுல் காந்தியின் போலி பிரச்சாரத்துக்கும் மலிவான அரசியல் செயல்பாடுகளுக்கும் ஒரு சரியான பதிலடி ஆகும்.
ராகுல் காந்தி தனது குறுகிய, தோல்வி அடைந்த அரசியல் செயல் திட்டத்தை முன்னெடுப்பதற்காக இந்தியாவை தவறாகப் பேசுவதிலும், அவதூறு செய்வதிலும் எந்த குற்ற உணர்ச்சியும் வருத்தமும் இன்றி இருப்பதால், அவர் நமது மக்களால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுகிறார்’’ என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் ராகுல் காந்தி, இந்திய பொருளாதாரம் செயலிழந்துவிட்டது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விமர்சித்திருந்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரிகளை விதித்தார். அப்போது அவர், இந்திய பொருளாதாரம் என்பது செயலிழந்த பொருளாதாரம் என விமர்சித்திருந்தார்.
ட்ரம்ப்பின் இந்த விமர்சனத்தை அடுத்து, ‘‘இந்தியப் பொருளாதாரம் ஒரு செயலிழந்த பொருளாதாரம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிபர் ட்ரம்ப் ஒரு உண்மையைச் சொல்லி இருக்கிறார். அதில் எனக்கு மகிழ்ச்சி. இந்திய பொருளாதாரம் ஒரு செயலிழந்துபோன பொருளாதாரம் என்பது முழு உலகுக்கும் தெரியும். ஆனால், பிரதமர் மோடிக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் மட்டும் தெரியாது’’ என்று ராகுல் காந்தி கடுமையாக கூறி இருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டு: 2025-ம் ஆண்டின் இந்திய வளர்ச்சி குறித்த கேள்விக்கு நேற்று பதில் அளித்த சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் ஜூலி கோசாக், ‘‘சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய மதிப்பீடு, 2025-26 நிதியாண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் உள்நாட்டு நுகர்வை அடிப்படையாகக் கொண்டது.
இந்தியாவின் மூன்றாம் காலாண்டு வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட வலுவாக இருந்தது. இது சர்வதேச நாணய நிதியம் தனது முன்கணிப்பை எதிர்காலத்தில் மேம்படுத்தக்கூடும். அந்த நேரத்தில், இந்தியாவின் திருத்தப்பட்ட வளர்ச்சி எண்ணை நாங்கள் வெளியிடுவோம். இந்தியாவைப் பொறுத்தவரை, அது உலகளாவிய வளர்ச்சியின் ஒரு முக்கிய உந்து சக்தியாக இருந்து வருகிறது. அதன் வளர்ச்சி மிகவும் வலுவாக உள்ளது’’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.