

டேராடூன்: உத்தராகண்ட் மாநில சிறுபான்மையினர் கல்வி ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்களுக்கு வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமையே வார விடுமுறையாக இருக்கும் என்று மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
உத்தராகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் நேற்று நடைபெற்ற காவல் துறை நினைவு தின நிகழ்ச்சியில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உத்தராகண்ட் மாநில சிறுபான்மையினர் கல்வி ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மதரஸாக்களுக்கு வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமையே வார விடுமுறையாக இருக்கும்.
கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளாக மதரஸாக்கள் தற்போது செயல்படுவதால், கல்வித் துறையின் விதிமுறைகள் அவற்றுக்கும் சமமாகப் பொருந்தும். அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரே திசையில் செயல்பட வேண்டும்” என்றார். நாட்டிலேயே முதன்முதலில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய மாநிலமான உத்தராகண்ட், உரிய அனுமதியின்றி செயல்படும் மதரஸாக்கள் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து, சிறுபான்மையினர் நலத்துறைச் செயலர் பராக் மதுகர் தகேட் கூறும்போது, “கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, பதிவு செய்யப்படாமல் செயல்பட்ட 250 மதரஸாக்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அவை முறையான பதிவின்றி செயல்பட்டதுடன், பிற மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளையும் சேர்த்துக் கல்வி வழங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது’’ என்றார்.