

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தில் மாநிலங்களவைக்கு இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எல்.முருகன் தனது எம்.பி பதவியை ராஜினமா செய்ததை அடுத்து, அந்த இடத்துக்கான தேர்தல் நவ. 12-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட எல்.முருகன், 2021-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை ஆகியவற்றின் இணை அமைச்சராக பொறுப்பேற்றார்.
தொடர்ந்து, 2024-ம் ஆண்டிலும் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அவரது பதவிக்காலம், ஏப்ரல் 2, 2030 வரை உள்ளது. இந்நிலையில், அவர் கடந்த 14-ம் தேதி மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார்.
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த விரும்புவதாக தனது ராஜினாமா கடிதத்தில் எல்.முருகன் குறிப்பிட்டிருந்தார்.
எல்.முருகன் ராஜினாமா செய்ததை அடுத்து காலியான மாநிலங்களவை இடத்துக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்.26 முதல் நவ.2 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
நவ.3-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மேற்கொள்ளப்படும். வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை நவ. 5 வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். நவ. 12ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதில் பதிவாகும் வாக்குகள் அன்றைய தினமே மாலை 5 மணிக்கு எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.