

போபால்: பொது சிவில் சட்ட மசோதாவுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதுகுறி்த்து முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது: கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும்போது ஒரு திருமணத்திற்கு மட்டுமே அனுமதி உண்டு. விவாகரத்து என்பது சட்டப்பூர்வ நடைமுறை மற்றும் நீதிமன்ற தீர்ப்பு மூலமாக மட்டுமே செல்லுபடியாகும். மேலும், திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, லிவ்-இன் உறவில் இருக்கும் தம்பதிகள் ஒரு மாதத்திற்குள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதற்கு திருமணத்திற்குரிய அதே வயது வரம்புகள் பொருந்தும். குறிப்பாக, திருமணமான ஒரு நபர் மற்றொரு பெண்ணுடன் லிவ்-இன் உறவில் ஈடுபட்டால், அவருக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. சொத்து மற்றும் வாரிசுரிமை விவகாரங்களில், இனி மகன்களுக்கும் மகள்களுக்கும் சம உரிமை உண்டு.
பழங்குடியினருக்கு விலக்கு: பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடி குழுக்களுக்கு இந்த சட்டத்தில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை ராமச்சந்திரனாக இருந்தாலும் சரி, ரஹீமாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் சமத்துவம் கிடைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மோகன் யாதவ் கூறினார்.
பொது சிவில் சட்ட ஆலோசனைகளின் போது முஸ்லிம் சமூகத்தினரிடையே இதற்கு பலத்த ஆதரவு இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, சுமார் 80 சதவீத பெண்களும், 40 சதவீத ஆண்களும் இந்த சட்டத்தை ஆதரித்துள்ளனர். இந்து மகள்களுக்குப் பாதுகாப்பு இருப்பது போல, தங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களுக்கும் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் எனப் பல முஸ்லிம் சகோதரர்கள் வெளிப்படையாகவே வலியுறுத்தியதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.