ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்

ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்
Updated on
1 min read

புதுடெல்லி: ராணுவ துணைத் தலைமை தளபதியாக பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் அடுத்த ராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 30-ம் தேதி இவர் பொறுப்பேற்பார்.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தற்போது ராணுவத் துணைத் தலைமைத் தளபதியாக பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் ஜூன் 30-ம் தேதி மதியம் முதல் அடுத்த ராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அதே நாளில் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், 1986 டிசம்பரில் கவசப் படையில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ஏறக்குறைய 40 ஆண்டுகளாக ராணுவப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர், செயல்பாடு, உத்தி, திறன் மேம்பாடு, நிறுவனம் உள்ளிட்ட துறைகளில் விரிவான அனுபவம் கொண்டவர். ராணுவத்தின் போர்ச் செயல் திறனை மேம்படுத்துவதிலும், நீண்ட கால மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளார்.

பல்வேறு சூழல்களில் படைகளுக்குத் தலைமை தாங்கிய லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், பாலைவனப் பகுதியில் கவசப்படைப் பிரிவுக்கும், மேற்குப் பகுதியில் ஒரு கவசப்படைப் பிரிவுக்கும், ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சி எதிர்ப்புப் படை பிரிவுக்கும் தலைமை தாங்கியுள்ளார். லெப்டினன்ட் ஜெனரலாக, இந்திய ராணுவத்தின் முதன்மையான தாக்குதல் படைப்பிரிவுகளில் ஒன்றான சுதர்சன் சக்ரா படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கிய இவர், பின்னர் டெல்லி பகுதிக்கான தளபதியாக பணியாற்றியுள்ளார்.

ராணுவத் தளபதியாக பதவி உயர்வு பெற்ற பிறகு, தென்மேற்கு மற்றும் தெற்கு ராணுவக் கட்டளைப் பிரிவுகளுக்கு இவர் தலைமை தாங்கி உள்ளார். படைகளை நவீனமாக்கியதில் முக்கிய பங்களிப்பை வழங்கிய லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், செயல்பாட்டுத் தேவைகளை வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்கால போர்க்களத் தேவைகளுடன் ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றி உள்ளார். சிறந்த ராணுவ நிபுணரான லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத், தொழில்முறை ராணுவக் கல்வியில் சிறந்து விளங்கியவர். பல்வேறு பயிற்சி பாடநெறிகளில் இவர் உயரிய இடங்களைப் பிடித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்
அசாமில் விமானப் படை விமானம் நொறுங்கி விபத்து - 5 வீரர்கள் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in